தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆகியவை குறித்து, அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரகப் பகுதிகளுக்கான தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 3,537 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்டக் கவுன்சிலர் என நான்கு பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. நேற்றுவரை 1,363 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 16ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். இதைத் தொடர்ந்து 19ஆம் தேதி, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
வேட்பு மனுக்கள் சார்ந்த பணிகள் தவிர்த்து, தேர்தல் வாக்குப்பதிவு பணிகளுக்காக 14 ஆயிரத்து 500 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சம்பந்தபட்ட ஒன்றியங்களில் மூன்று கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது. வாக்குப்பதிவிற்கு தேவையான பொருள்கள் வழங்க, வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் 12 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 378 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. எனவே அப்பகுதிகளில் கூடுதல் காவல் பாதுகாப்பு, கண்காணிப்பு கேமரா அமைக்கப்படுவது, நுண் பார்வையாளர் நியமனம் என சிறப்புக் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தலுக்குத் தேவையான உபகரணங்கள் போதுமான அளவு தயார் நிலையில் உள்ளன.
ஊராட்சிப் பதவிகளுக்கு ஏலம் விடுவது போன்ற புகார்கள் எதுவும் இதுவரை வரவில்லை, அவ்வாறு செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி: கடலூரில் திமுகவினர் சாலை மறியல்!