தூத்துக்குடியில் லாரி சாலையோர கடைகளில் மோதி விபத்து தூத்துக்குடி:அரசு பாலிடெக்னிக் கல்லூரி எதிரே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தை நோக்கி வந்த வந்த மணல் லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடைகளுக்குள் புகுந்து விபத்திற்குள்ளானது.
தூத்துக்குடி மாவட்டம், தட்டப்பாறை கிராமத்தில் இருந்து டிப்பர் லாரியில் எம்.சாண்ட் மணலை ஏற்றிக் கொண்டு, லாரி டிரைவரான பரமகுரு என்பவர் இன்று (செப்.23) காலை 8 மணியளவில் தூத்துக்குடி மாநகர சாலையில் வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில், அரசு பேருந்து ஒன்று பயணிகளை இறக்கி விடுவதற்காக நின்றுள்ளது. அப்பொழுது தூத்துக்குடி மாநகர சாலையில் வேகமாக வந்த லாரி தீடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது. சாலையோரம் நின்ற பேருந்தின் மீது லாரி மோதாமல் இருப்பதை தவிர்க்க முயன்ற ஓட்டுநர் பரமகுரு அருகில் திருப்பிய போது கடைகளுக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:கொங்கு மண்டலத்தில் கொடி நாட்டுமா திமுக? - திருப்பூரில் பிரமாண்ட கூட்டத்திற்கு ஏற்பாடு!
சாலையை விட்டு இறங்கிய லாரி, மின்கம்பங்களை சாய்த்து அருகில் இருந்த கடை மற்றும் வீட்டு முகப்பு மீது பயங்கரமாக மோதியது. இதில் விபத்தில் லாரியின் முன்பக்கம் அடையாளம் தெரியாத அளவிற்கு நொறுங்கியது. இந்த விபத்தில் லாரியை ஓட்டிய டிரைவர் பரமகுரு மற்றும் பேருந்தில் இருந்து இறங்கிய பிரகாஷ் ஆகிய இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், லாரியானது சாலையோர கடையின் முகப்பு பகுதியில் மோதியதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்யும் பணி மற்றும் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நிற்குமா..? கடம்பூர் ராஜூ கோரிக்கை!