தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எட்டையபுரம் ஆட்டுச் சந்தையில் விற்பனை மந்தம்.. வரத்து குறைவால் வியாபாரிகள் கவலை! - aattu santhai

Ettayapuram Goat market: தீபாவளி பண்டிகையையொட்டி எட்டையபுரம் ஆட்டு சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்தது. இதனால் ஆடுகள் விலை அதிகமாக காணப்பட்டது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் வியாபாரிகளுக்கு சற்று கவலையை ஏற்படுத்தியது.

எட்டையபுரம் ஆட்டு சந்தையில் ஆடு விற்பனையில் மந்தம்
எட்டையபுரம் ஆட்டு சந்தையில் ஆடு விற்பனையில் மந்தம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2023, 2:08 PM IST

எட்டையபுரம் ஆட்டு சந்தையில் ஆடு விற்பனையில் மந்தம்

தூத்துக்குடி:தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற எட்டையபுரம் ஆட்டுச் சந்தை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் செயல்படுவது வழக்கம். மதுரை, மானாமதுரை, திருமங்கலம், அருப்புக்கோட்டை, ராமநாதபுரம், சாயல்குடி, எட்டையபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராமங்களிலிருந்து ஆடுகளை விற்பனை செய்ய விவசாயிகளும், வியாபாரிகள் ஏராளமானோர் வருவதுண்டு.

இச்சந்தையில் ஆண்டுதோறும் ரம்ஜான், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்கள், முகூர்த்த நாட்கள் மற்றும் கோயில் திருவிழாக்களையொட்டி ஆடுகள் விற்பனை அதிகமாக இருக்கும். அதிலும் பண்டிகை காலங்களில் சுமார் ரூ.8 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெறும் எனவும் மற்ற சாதாரண நாட்களில் ரூ. 2 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இன்று (நவ 10) எட்டையபுரம் ஆட்டுச் சந்தையில் அதிகளவில் வியாபாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவு விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு வரதா காரணத்தினால் வியாபாரிகளும் அதிக அளவு வரவில்லை. மேலும், ஆடுகளின் விலை சற்று உயர்ந்தே காணப்பட்டது.

ஆடுகளின் வயது மற்றும் தரத்தைப் பொறுத்து கிலோ சுமார் ரூ.600 முதல் ரூ.1,000 வரை விற்பனையானது. இளம் குட்டி ரூ.1,500 வரை விற்பனையானது. சுமார் 25 கிலோ கொண்ட கிடா ரூ.20 ஆயிரம் வரை விலை போனது. தீபாவளி நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி ஏற்கனவே மேலப்பாளையம், அருப்புக்கோட்டை, திருமங்கலம் உள்ளிட்ட ஆட்டுச் சந்தைகள் கூடிவிட்டன.

அதனால் இன்று எட்டையபுரம் ஆட்டுச் சந்தைக்கு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் வருகை குறைவாக இருந்தாக விவசாயிகள் கூறுகின்றனர். 1,500 ஆடுகள் மட்டுமே விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் வாரந்தோறும் வழக்கமாக நடைபெறும் அளவிலேயே ரூ.2 கோடி வரை விற்பனை நடந்துள்ளது என்கிறனர் விவசாயிகள்.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், "எட்டையபுரம் ஆட்டுச் சந்தைக்கு வரும் ஆடுகள் கிராமப் புறங்களில் இருந்து கொண்டு வரப்படுவதால் அதற்கு தனி மவுசு உண்டு. இந்த ஆண்டு தீபாவளிக்கு அதிகளவு ஆடுகள் வரும் என்று எதிர்பார்த்து வந்தோம். ஆனால், ஏற்கெனவே பல்வேறு பகுதிகளில் ஆட்டுச் சந்தைகள் கூடிவிட்டதால் இங்கு ஆடுகளின் வரத்து குறைவாக இருந்தது.

மேலும், கடந்த ஒரு வாரமாக மழைப் பொழிவு இருந்ததால் விவசாயிகளால் ஆடுகளை கொண்டுவர முடியாத சூழலும் உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக வாரந்தோறும் வரும் அளவிலேயே ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. அதேபோல் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு ஆடுகளின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. கடந்தாண்டு கிலோ ரூ.500 முதல் ரூ.800 வரையே இருந்தது. இந்த ஆண்டு ரூ.800 முதல் ரூ.1,000 என அதிகரித்து காணப்பட்டது” என்றனர்.

இதையும் படிங்க:கூட்டுறவு பண்டகசாலை பட்டாசு விற்பனையில் முறைகேடு..! தரமற்ற பட்டாசுகளை விற்றதால் மக்கள் அதிர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details