தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள உருளைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் சோ.தர்மன். இவர், எழுதிய ‘சூல்’ என்ற நாவலுக்கு 2019ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் “சாகித்ய அகாடமி” விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த சோலையப்பன், பொன்னுத்தாய் ஆகியோருக்கு மகனான இவர், கோவில்பட்டியிலுள்ள தனியார் பஞ்சாலையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இடைச்செவலைச் சேர்ந்த கரிசல் காட்டு எழுத்தாளர் ’கி.ரா’வின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு, கடந்த 1980-ம் ஆண்டு தன் எழுத்துப் பணியை துவக்கினார். இதுவரை 13 நூல்கள், 8 சிறுகதை தொகுப்புகள், 4 நாவல்கள் எழுதியுள்ளார். ஒவ்வொரு நாவலையும் எழுதி முடிக்க இவர் எடுத்துக் கொண்டது 10 ஆண்டுகளாகும். கடந்த 2016-ம் ஆண்டு பிரசுரமான ‘சூல்’ நாவலுக்காகத்தான் இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் பேசிய எழுத்தாளர் சோ.தர்மன், “நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது தமிழ்நாடு முழுவதிலும் சுமார் 40 ஆயிரம் கண்மாய்கள் இருந்தன. அந்தக் கண்மாய்களின் இன்றைய நிலை என்ன என்பதுதான் ‘சூல்’ நாவலின் மையக்கரு. தற்போது மிகமுக்கியப் பிரச்னையாகவும் அவசியமான தேவையாகவும் இருப்பது தண்ணீர்தான். கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி முழுவதுமே மானாவாரி நிலங்கள்தான். கிணறுகளே முக்கிய நீராதாரம்.
பல ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கண்மாய்கள் அனைத்துமே அந்தந்த கிராம மக்களின் கட்டுப்பாட்டில் பயன்பாட்டில் இருந்தன. மராமத்துகளை கிராம மக்களே செய்து கொள்வார்கள். இரண்டு நாளைக்கு ஒருவர் வந்து கண்மாய்களின் மராமத்து பணிகளை மேற்கொள்வர்.
அடிப்படையில் நான் ஒரு விவசாயி. 10 ஏக்கர் நிலம் தண்ணீரில்லாமல்தான் தரிசாக கிடக்கிறது. இந்த தரிசுநிலம்தான், இந்த நாவலை எழுத தூண்டுதலாக இருந்தது. ‘சூல்’ என்றால், நிறைசூலி என்பது பொருள். ஒரு கண்மாயில் மீன்கள், தவளை உள்ளிட்ட நீர்வாழ் உயிர்கள் வாழ்வதுடன் இனப்பெருக்கம் செய்து கொண்டே இருக்கும். எனவே, பிரசவிக்கும் தாயாக அந்த நாவலை உருவகப்படுத்தி உள்ளேன். மத்திய அரசின் சாகித்ய அகாடமி எனும் அங்கீகாரத்தால் எனக்கு கடமைகள் அதிகரித்துள்ளன. இந்த விருதினை எனது உருளைக்குடி கிராம மக்களுக்கே சமர்ப்பிக்கிறேன்.