கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவலை முற்றிலும் தடுத்திடும்விதமாக சமூக தனிமைப்படுத்துதலைத் தீவிரப்படுத்தும்வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும்போதும் பொது இடங்களில், நடமாடும்போதும் உரிய முறையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, உரிய முறையில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுபவர்களுக்கு முதன்முறையாக காவல் துறையினர், உள்ளாட்சித் துறையினர் மூலம் ரூ.50 உடனடி அபராதம் விதிக்கப்படும்.
இரண்டாவது முறையாக ரூ.500 உடனடி அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறையாக இருப்பின் காவல் துறையினரால் வழக்குப்பதிவு செய்வதுடன் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கும் ரூ.200 உடனடி அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்க தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடைகள், நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.