தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட காமராஜர் நல்லூரில் 40க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி தாமிரபரணி ஆற்றின் ஶ்ரீவைகுண்டம் அணை வடகால் கரையோரம் உள்ளது.
இந்நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை மாவட்ட நிர்வாகத்தினர் பலமுறை அப்பகுதி மக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக அதில் 28 பேருக்கு நட்டாத்தி பகுதிகளிலும், சிவகளை பகுதிகளிலும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளனர்.
சிவகளையில் வழங்கப்பட்ட இடம் அகழ்வாராய்ச்சி செய்யப்படும் பகுதி என்பதால், மாற்று இடம் கொடுப்பதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (அக.8) காமராஜர் நல்லூரில் ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது.