தூத்துக்குடி:மாவட்ட ஆட்சியர் சந்தீர் நந்தூரியின் பேச்சுவார்த்தைக்கு பின் செல்வன் கொலைக்கு நீதி கேட்டு நடத்தப்பட்டு வந்த போராட்டம் கைவிடப்பட்டு, உடலை வாங்க சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வன். இவர், தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கும் பக்கத்து ஊரைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான திருமண வேல் என்பவருக்கும் நிலத்தகராறு தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
இதுதொடர்பாக திருமணவேலின் தூண்டுதலின் பேரில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் என்பவர் செல்வன் மீது பொய் வழக்குப் பதிவு செய்து துன்புறுத்தியதாகத் தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த செல்வனை திருமணவேலின் ஆட்கள் காரில் கடத்தி சென்று அடித்து சாலையில் வீசி சென்றனர்.
படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செல்வனை மீட்ட அக்கம்பக்கத்தினர், திசையன்விளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி செல்வன் உயிரிழந்தார். இதுதொடர்பாக செல்வனின் மனைவி ஜீவிதா திசையன்விளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் திசையன்விளை காவலர்கள் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல், முத்துகிருஷ்ணன், சுடலை கண்ணு உள்பட 6 பேர் மீது கொலை மற்றும் கடத்தல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமண வேல், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக இருந்த நிலையில் மற்ற மூவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். திருமணவேல் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் செல்வன் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், சென்னை சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்ற எண் 23 சரணடைந்தனர்.
இதனிடையே இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை இடைநீக்கம் செய்து நெல்லை டிஐஜி பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே செல்வன் உடலை வாங்க மறுத்து அவருடைய உறவினர்கள் வீட்டின் அருகே 3 நாள்களாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.
நேற்றைய தினம்(செப்.20) இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் விடிய விடிய செல்வன் குடும்பத்தாருடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக தண்டுபத்தில் உள்ள அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனைக் கொண்டு காவலர்கள் விசாரணை நடத்தியதில் கார் உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட காயல்பட்டினத்தில் சேர்ந்த ஜின்னா, தண்டுபத்து பகுதியைச் சேர்ந்த செல்வநாயகம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.