தூத்துக்குடி:தசரா திருவிழாவுக்கு சிறப்பு பெற்ற தூத்துக்குடி மாவட்டம், 'குலசேகரன்பட்டினம்'. இனி விண்வெளி துறையிலும் தனி முத்திரையை பதிக்க உள்ளது. இந்தியாவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை தொடர்ந்து இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்பட இருப்பது தூத்துக்குடி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது.
இந்த ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ள குலசேகரன்பட்டினம் கடற்கரையில் இருந்து அரைவட்ட வடிவில் இடம் தேர்வு செய்யப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளது. குலசேகரன்பட்டினத்தை சுற்றியுள்ள கிராமங்களான மாதவன் குறிச்சி, கூடல் நகர், அமராபுரம் மற்றும் பள்ளக்குறிச்சி, அழகப்பபுரம் ஆகிய பகுதிகளில் 2,376 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவிடம் ஒப்படைத்துள்ளது. இதில், கிழக்கு கடற்கரை சாலையும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து அந்த இடத்தை சுற்றிலும் ரூ.6.24 கோடியில் சுற்றுச்சூழல் மற்றும் கம்பி வேலி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.
இதனால், கிழக்கு கடற்கரை சாலையானது மணப்பாடு, அமலாபுரம் வழியாக கருமேணியாற்றை கடந்து அழகப்பபுரம் வழியாக பெரிய தாழைக்கு செல்லும் வகையில் மாற்றுப்பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக அமராபுரத்தில் கருமேணி ஆற்றுப்பாலத்தின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று நிறைவுபெறும் தருவாயில் உள்ளன.
ராக்கெட் ஏவுதளம் குலசையில் வர காரணம்:ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் 13.72 டிகிரி வட அட்ச ரேகையில் அமைந்துள்ளது. மேலும், இங்கிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகள் இலங்கை, இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் மீது பறந்துவிடாமல் இருக்க, தென்கிழக்கு நோக்கி ஏவப்பட்டு பின்னர், கிழக்கு நோக்கித் திசை திருப்பப்படுகிறது. ஆனால், குலசையில் இருந்து ஏவும்போது திசை திருப்பிவிட வேண்டிய அவசியமில்லை. குலசேகரன்பட்டினம் கடற்கரைப் பகுதி பூகோள ரீதியாக ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு உகந்த இடமாக கருதப்படுகிறது.
மேலும், ராக்கெட் ஏவுதளம் அமையும் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டர் குறைவாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாதவாரும் புயல், மின்னல், மழையின் தாக்கம் குறைவாக உள்ள இடமாகவும் இருக்க வேண்டும். மேலும், குலசேகரன்பட்டினம் அருகே மணப்பாடு கடற்கரையில் மணலும் பாறையும் கலந்த குன்று வளைவாக இயற்கையாக அமைந்து அரண் போன்று, நின்று புயல் போன்ற பேரிடரை தடுக்கக்கூடியதாக உள்ளது. இதனால், ராக்கெட் ஏவுதளத்துக்கு ஏற்ற இடமாக குலசேகரன்பட்டினம் விளங்குகிறது.
30 சதவீத எரிபொருள் சேமிப்பு:ஸ்ரீஹரிகோட்டாவே ஒப்பிடும்போது, குலசேகரன்பட்டினத்தில் இருந்து விண்கலங்களை செலுத்தும்போது 30% எரிப்பொருள் மிச்சமாகும். மேலும், கூடுதல் எடையிலான விண்கலங்களையும் செலுத்த முடியும். நெல்லை மாவட்டம் காவல்கிணறில் உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ நிறுவன மையத்திலிருந்து ராக்கெட்டுகளுக்கு தேவையான எரிபொருள் எஞ்சின் போன்றவற்றை சாலை மார்க்கமாக என்றால் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு கொண்டு செல்ல வேண்டும். அதுவே, குலசேகரன்பட்டினத்துக்கு என்றால் சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில்தான் இதன் மூலம் குலசேகரன்பட்டினத்திற்கு எரிபொருள் போன்றவற்றை எளிதாகவும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் கொண்டுவர முடியும்.
விண்வெளி கேந்திரமாகும் தமிழகம்:கடந்த 1960 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுதளத்தை தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் கடற்கரையில் அமைப்பதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சில காரணங்களால் கைவிடப்பட்டு ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டது. தற்போது இந்தியாவின் இரண்டாவது மற்றும் தமிழகத்தின் முதல் ராக்கெட் ஏவுதளம் என்ற அந்தஸ்த்தை குலசேகரன்பட்டினம் பெறுகிறது. சமீபகாலமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள்களையும் வணிக ரீதியில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்துகிறது.