மதுரை: வளிமண்டல சுழற்சி காரணமாக, கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நெல்லை சந்திப்பு உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகள் வெள்ள நீரால் சூழ்ந்தது. இதனையடுத்து, மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்றது.
அதேநேரம், தூத்துக்குடியில் கொட்டித் தீர்த்த மழையால், திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து, முதலில் 300 பேர் அதிலிருந்து மீட்கப்பட்ட நிலையில், பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மீதமுள்ள 500 பேரும் மீட்கப்பட்டு, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர், அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் எழும்பூர் ரயில் நிலையம் சென்றடைந்தனர்.
இதனிடையே, மழை வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டம் பகுதி பெரும்பாலும் பாதிப்படைந்தது. அங்கு, மாநில பேரிடர் மீட்புப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய விமானப்படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.