தூத்துக்குடி:தமிழ்நாட்டில் புதிதாக உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழையானது பெய்து வருகிறது. இதனால் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பகல் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கிய நிலையில், நேற்று இரவு விடிய, விடிய பெய்த மழையால் தூத்துக்குடியின் பிரதான சாலைகளான தமிழ் சாலை ரோடு, வ.உ.சி சாலை, கடற்கரைச் சாலை, லூர்தம்மாள் புரம், இந்திரா நகர், நிகிலேஷ் நகர், பால்பாண்டி நகர், புஷ்பா நகர், ராஜகோபால் நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தற்போது பெய்து வரும் மழைநீரால் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து வகை கல்வி நிலையங்களுக்கும் (இன்று டிச.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார்த் துறை நிறுவனங்கள், வங்கிகள் என அனைத்து துறை அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.