மதுரை - தூத்துக்குடி வரையிலான 160 கி.மீ. தூரத்துக்கு இரண்டாவது ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின. ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தின் கீழ், கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் நிறுவனம் 2ஆவது தண்டவாளம் அமைக்கும் பணிகளை செய்துவருகிறது.
தற்போது கடம்பூரில் இருந்து வாஞ்சி மணியாச்சி வழியாக, தட்டப்பாறை வரையிலான 35 கி.மீ. தூரத்துக்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ரயில் தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. கடம்பூர், வாஞ்சி மணியாச்சி, தட்டப்பாறை ஆகிய ரயில் நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு, கட்டுப்பாட்டு அறை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பணிகள் நிறைவடைந்த கடம்பூர் முதல் வாஞ்சி மணியாச்சி வரை சுமார் 11 கி.மீ. தூரம் தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் லெனின், ரயில்வே கட்டுமான நிர்வாக தலைமை அலுவலர் சின்ஹா மற்றும் அலுவலர்கள் டிராலிகளில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து நேற்று காலை வாஞ்சி மணியாச்சி முதல் தட்டப்பாறை வரையில் அலுவலர்கள் டிராலியில் சென்று ஆய்வு செய்தனர். மேலும், வாஞ்சி மணியாச்சி, தட்டப்பாறை ஆகிய ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பயணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை பார்வையிட்டார்.