தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுணங்கிய புதியம்புத்தூர் ரெடிமேட் ஜவுளி வியாபாரம் - வேதனையில் தொழிலாளர்கள் - புதியம்புத்தூர் ஜவுளி வியாபாரம்

தூத்துக்குடி: கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பாதிப்படைந்துள்ள புதியம்புத்தூர் தொழிலாளர்கள் குறித்த செய்தித் தொகுப்பு...

puthiyamputhur readymade  புதியம்புத்தூர் ரெடிமேட் ஜவுளி தொழில்  தூத்துக்குடி மாவட்டச் செய்திகள்  புதியம்புத்தூர் ஆடை உற்பத்தி  புதியம்புத்தூர் ஜவுளி வியாபாரம்  thoothukudi district news
சுணங்கிய புதியம்புத்தூர் ரெடிமேட் ஜவுளி வியாபரம்; வேதனையில் தொழிலாளர்கள்

By

Published : Aug 5, 2020, 4:19 AM IST

மனிதர்களுக்கு அத்தியாவசியத் தேவையாக இருப்பது உண்ண உணவு, உடுத்த உடை, இருப்பிடும் இம்மூன்றும் தான். இதனை தமிழ் முன்னோர்கள் தங்கள் படைத்த இலக்கியங்களில் வலியுறுத்திக் கூறியுள்ளனர். தனியொரு மனிதனுக்கு ஜகத்தினை அளித்திடுவோம் என்று உணவின் முக்கியத்துவத்தையும், எலி வளையானாலும் தனி வளைவேண்டும் என உறைவிடத்தின் முக்கியத்துவத்தையும், கந்தல் ஆனாலும் கசக்கி கட்டு என உடையின் முக்கியத்துவத்தையும் சொல்லிவைத்தனர் தமிழ் முன்னோர்கள்.

உலகத்திற்கே கலாச்சாரம், கல்வி, வேளாண்மை, விவசாயம் என அனைத்திற்கும் எடுத்துக்காட்டாய் முன்வரிசையில் இருக்கும் தமிழ்நாடு ஆடை உற்பத்திக்கும் பெயர் பெற்றது. திருப்பூர் மாவட்டம் பின்னலாடை உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது. இங்கு, தயார் செய்யப்படும் பின்னலாடைகள் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இலங்கை உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சுணங்கிய புதியம்புத்தூர் ரெடிமேட் ஜவுளி வியாபாரம்

பின்னலாடைக்கு திருப்பூர் எவ்வாறு புகழ்பெற்றதோ, சிறுவர், சிறுமியர்களுக்கான ரெடிமேட் ஜவுளி உற்பத்திக்கு மிகவும் பெயர் பெற்றது புதியம்புத்தூர். தமிழ்நாட்டின் பெரிய ஜவுளி கடைகள் முதல் உள்ளூர் சந்தை வியாபாரம் வரை தனது கொடியை நாட்டியுள்ளது புதியம்புத்தூர்.

தூத்துக்குடியில் இருந்து சுமார் 27 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள புதியம்புத்தூர் பேரூராட்சியானது பரப்பளவில் மிகவும் சிறிய ஊர். ஆனால், இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.2.5 கோடி வரை ஜவுளி ஏற்றுமதி நடைபெறுகிறது என்றால் யாரும் அவ்வளவு எளிதாக நம்பமாட்டார்கள். புதியம்புத்தூர் பகுதியில் உள்ள சுமார் 50 ஆயிரம் வீடுகளில் லட்சக்கணக்கான மக்கள் தையல் தொழில்மூலம் தங்களது வாழ்வாதாரங்களை அமைத்துக்கொண்டுள்ளனர்.

தையல் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்

இவ்வூரில் 10க்கு 10 அளவுள்ள வீட்டில் கூட தையல் இயந்திரம் இல்லாமல் இருக்காது. காலை சரியாக 9 மணிக்கு ஒலிக்கத் தொடங்கும் தையல் இயந்திரத்தின் சத்தம் மாலை 6 மணி வரை இடைவிடாது ஒலித்துக்கொண்டே இருக்கும்.

புதியம்புத்தூரில் மட்டும் சுமார் 50,000 தையல் எந்திரங்களில் ரெடிமேட் ஜவுளி உற்பத்தி தொழில் நடைபெற்று வருகிறது. துணி அளவெடுப்பது, அளவுக்கு ஏற்றார்போல் துணியை வெட்டுவது, வெட்டிய துணிகளை தைப்பது, தயார் செய்யப்பட்ட ஆடைக்கு மேல் ஜிகினா, எம்ப்ராய்டிங் போன்ற அழகு வேலைகள் செய்வது, பட்டனிடுதல், காஜா, துணிகளை மடித்து கட்டுதல், மொத்த ஜவுளி வியாபாரம் என ரெடிமேட் ஆடைத் தொழிலை நம்பி லட்சக்கணக்கான பேர் பிழைப்பு நடத்தி வருகின்றனர். ரெடிமேட் ஜவுளி உற்பத்தியானது, புதியம்புத்தூரில் மட்டுமல்லாமல் புதியம்புத்தூர் ஊரை மையமாக கொண்டு சுற்றுவட்டார கிராம பகுதிகளிலும் நடைபெறுகிறது.

எப்போதும் பரபரப்புடன் இயங்கி வரும் புதியம்புத்தூர் இந்த கரோனா ஊரடங்கால் கலையிழந்துள்ளது. நாளொன்றுக்கு 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை சம்பாதித்து கொண்டிருந்த நபர்கள், தற்போது 300 ரூபாய் சம்பாதிப்பதே பெரிய விஷயமாக உள்ளது. கரோனோவால் முடங்கிப்போன தையல் தொழிலாளர்கள் தற்போது வயிற்றுப்பிழைப்புக்காக ஊர் ஊராக சென்று பழைய துணிகளைத் தைத்து வருகின்றனர். அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கிறது. அதுவும், பாதியளவு ஊதியத்துடன் மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது. இந்த பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பாதியளவு ஊதியம் கிடைத்தாலும் போதும் என்கிற அளவுக்கு பல தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

பாதியளவு ஊதியத்துடன் வேலை பார்க்கும் தொழிலாளர்கள்

இதுகுறித்து தையல் தொழிலை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் கூறியபோது, "சரவணா ஸ்டோர், சரவணா செல்வரத்தினம், போத்தீஸ் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு கூட இங்கிருந்துதான் மொத்த விலையில் ரெடிமேட் ஜவுளிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 6மாதக் குழந்தைகள் முதல் 14 வயது சிறுவர்- சிறுமிகளுக்கு தேவையான அனைத்து ஆடைகளும் மொத்தமாக இங்கு தயார் செய்யப்படுகின்றன. புதியம்புத்தூரில் உற்பத்தி செய்யப்படும் ரெடிமேட் ஜவுளிகள் கேரளா, ஆந்திரா ஆகிய பகுதிகளுக்கு அனுப்பபட்டு வருகிறது.

கோடிக்கணக்கில் நாளொன்று வணிகம் நடைபெற்று வந்த ஊரில் தற்போது லட்சத்தில் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து முடக்கத்தால் சரக்குகளைப் பெறுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கையிருப்பிலுள்ள சரக்குகளைக் கொண்டே வேலை வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக மே, ஜுன் மாதங்களில் பள்ளி மாணவர்களுக்கான சீரூடை தயாரிப்பில் நல்ல வருமானம் கிடைக்கும். தற்போதுள்ள முடக்கத்தால் அதுவும் கிடைக்கவில்லை. ஊரடங்கில் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் அரசு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குகிறது. ஆனால், ஐந்தாவது மாதமாக நீடிக்கும் ஊரடங்கைச் சமாளிக்க அந்தப்பணம் போதுமானதாக இல்லை. இந்த கரோனா அச்சம் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை.

ரெடியான ரெடிமேட் ஆடைகள்

எனவே தையல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தையல் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரண உதவி தொகை வழங்கினால் பேருதவியாக இருக்கும். தற்பொழுது போக்குவரத்து சுணக்கம் ஏற்பட்டுள்ளதால் சரக்குகளை இங்கிருந்து தேவையான பகுதிகளுக்கு அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னைக்கு அனுப்ப வேண்டிய சரக்குகள் லட்சக்கணக்கில் தேக்கம் அடைந்துள்ளன.

விழுப்புரம் வரை மட்டுமே லாரிகளில் சரக்குகளை ஏற்றி கொண்டு செல்ல முடிகிறது. அதைத்தாண்டி மற்ற பகுதிகளுக்கு செல்ல முடியாததால் ஆங்காங்கே சரக்குகளை நிறுத்தி வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சரக்குகளை எடுத்துச் செல்வதற்கும் லாரிகளுக்கு இரண்டு மடங்கு கட்டணம் கொடுக்கவேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் நஷ்டம் எங்கள் தொழிலையே பாதிக்கும். எனவே போக்குவரத்தை சீர்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இதையும் படிங்க:43 உலக நாடுகளை சுற்றி வந்த முதல் இந்திய தமிழ் பெண்!

ABOUT THE AUTHOR

...view details