தூத்துக்குடி: கோவில்பட்டி தனியார் திருமணமண்டபத்தில் வைத்து புதிய தமிழகம் கட்சியின் சார்பில் செயல் வீரர் கூட்டம் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கோவில்பட்டி தாலுகா அலுவலகம், எதிரே திமுக அரசைக்கண்டித்து மின் கட்டண உயர்வை திரும்பப்பெறக்கோரி ஆர்ப்பாட்டம் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'திமுக தேர்தல் அறிக்கையில் மாதம் ஒரு முறை மின் அளவீடு செய்யப்படும் எனக்கூறியது. ஆனால், தற்போது திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. திராவிட மாடல் எனக்கூறும் திமுக சொல்லில் மட்டும் இல்லாமல் செயலிலும் செய்ய வேண்டும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும்.
கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு மாவட்டமாக அறிவிக்க வேண்டும். நீட் தேர்வை எதிர்க்கும் திமுக அரசு மின் கட்டணத்தை மத்திய அரசின் அழுத்தம் காரணமாக உயர்த்தியுள்ளது என சொத்தைக்காரணத்தை காட்டுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் திமுக, அதிமுக மீது சாட்டப்பட்ட குற்றங்களை தற்போது திமுக ஆட்சி வந்ததும் சரி செய்துவிட்டார்களா?' என்றார்.
மொழி குறித்து ஆளுநர் கூறியது குறித்த கேள்விக்கு, 'நான் அதை ஆழமாகப் படித்து விட்டுத்தான் பதில் கூற முடியும்' எனக் கூறினார்.