தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தூத்துக்குடியில் ஜாதி ரீதியான பிரச்சினைகள் பெருமளவில் குறைந்துள்ளது" - டிஎஸ்பி சரவணன் பாலாஜி பெருமிதம்! - மனமாற்றத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

‘Puthiya Pathai counseling program’: தூத்துக்குடியில் முதன்முறையாக தொடர் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடியவர்களை அழைத்து, குற்ற செயல்களில் ஈடுபடாமல் திருந்தி நல்வாழ்வு வாழ மருத்துவர், சட்ட வல்லுநர், காவல்துறை அதிகாரிகள் கொண்ட 'புதிய பாதை' என்ற மனமாற்றத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Puthiya Pathai counseling program
"தூத்துக்குடியில் ஜாதி ரீதியான பிரச்சினைகள் பெருமளவில் குறைந்துள்ளது" - டிஎஸ்பி சரவணன் பாலாஜி பெருமிதம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 8:53 AM IST

Tutcorin DSP Byte

தூத்துக்குடிமாவட்டத்தில் முதன்முறையாக மாவட்ட காவல்துறை சார்பாக, பல குற்ற செயல்களில் ஈடுபட்டு ஜாமீனில் வெளிவந்தவர்கள் மற்றும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள் திருந்தி நல்வாழ்வு வாழ மருத்துவர், சட்ட வல்லுநர், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மூலம் 'புதிய பாதை' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (செப்.29) தென்பாகம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பளார் எல்.பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட டிஎஸ்பி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வந்திருந்த நபர்களுக்கு அறிவுறை வழங்கினார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், "பழிக்குப்பழி எண்ணம் மேலோங்கி இருப்பது, கோபத்தை கட்டுபடுத்த முடியாத நிலை, போதை பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது, பய உணர்ச்சி இல்லாமை மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுவதால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு இல்லாதது போன்ற காரணங்களால் தான் குற்ற செயல்களில் மீண்டும் மீண்டும் ஈடுபடுகின்றனர்.

அவ்வாறு ஈடுபடுபவர்களை குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக, தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அழைத்து வாரந்தோறும் சனிக்கிழமை அன்று காவல் நிலையங்களில் வைத்து இக்குழுவினரால் ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும், மேற்படி தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வழக்குகள் உள்ளவர்கள், அவர்கள் மேல் உள்ள வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும்.

இனிவரும் காலங்களில் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக, இந்த மனநல ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த முகாம் திருந்தி நல்வாழ்வு வாழ்வதற்கான ஒரு முயற்சியாகும். மேலும், கடந்த 1 ½ வருடங்களில் நடந்த கொலை வழக்குகள், கொள்ளை வழக்குகள், போக்சோ வழக்குகள் போன்ற அனைத்து குற்ற வழக்குகளிலும் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதிலும் முறப்பநாடு காவல் நிலைய வி.ஏ.ஓ கொலை வழக்கில், கொலை நடந்த 57 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, குற்றவாளிகள் 2 பேருக்கும் 143 நாட்களில் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை பெற்றுத் தந்தது குறிப்பிடதக்கதாகும். மாவட்ட காவல்துறையினரால் இதுவரை 3 ஆயிரத்து 620 'மாற்றத்தை தேடி' என்ற விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு 1 லட்சத்து 14 ஆயிரத்து 390 பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் பயனாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஜாதி ரீதியான பிரச்சினைகள் பெருமளவில் குறைந்துள்ளது.

மேலும் கொலை வழக்குகள் 24 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்நிகழ்ச்சியின் பயனாக மாவட்டத்தில் கிராமங்களின் ஊர்தலைவர்கள், முக்கியஸ்தர்கள், ஜாதிய தலைவர்கள் தாமாக முன்வந்து தங்களது பகுதிகளில் உள்ள ஜாதிய அடையாளங்களை வண்ணம் பூசி அழித்து வருகின்றனர். தற்போது வரை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 377 ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில நாட்களில் மாவட்டம் முழுவதுமாக அனைத்து ஜாதிய அடையாளங்களும் அழிக்கப்பட்டுவிடும். மேலும் தாமாக முன்வந்து ஜாதிய அடையாளங்களை அழித்த பொதுமக்கள் அனைவருக்கும் மாவட்ட காவல் துறை சார்பாக நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், தூத்துக்குடி மனநல மருத்துவர் சிவசைலம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் மேற்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு ஜாமீனில் வெளிவந்த 32 நபர்களுக்கும், அடிப்படை மன உளவியல், கோபத்தை கட்டுபடுத்தும் வழிமுறைகள், போதை பழக்க அடிமைத்தனம் மீட்பு அறிவுரைகள், குற்ற செயல்களில் ஈடுபடுவதால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் தனித்தனியாக எடுத்துரைத்து ஆலோசனைகள் வழங்கினர்.

இதையும் படிங்க: 1992, ஜூன் 20 வாச்சாத்தி மலைக்கிராமத்தில் நடந்தது என்ன? - வழக்கின் முழு விபரம்!

ABOUT THE AUTHOR

...view details