தூத்துக்குடி:கடந்த சில நாள்களுக்கு முன்பு புதுச்சேரி அருகே நிவர் புயல் கரையைக் கடந்த நிலையில், வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அந்தக் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறும் எனவும் அப்புயலுக்கு நிரெவி என வானிலை ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டிருந்தனர்.
இப்புயல், பாம்பன்-குமரி இடையே கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலால், தென்மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்திருந்தது.
இதன்காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அந்தந்த மாவட்டங்களில் எடுக்கப்பட்டுவருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் புரெவி புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் குமார் ஜெயந்த் நேற்று அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கனமழை பெய்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், வெள்ளநீர் தேங்கும் பகுதிகள் குறித்தும் கேட்டறிந்த அவர், தேங்கிய மழைநீரை வெளியேற்றத் தேவையான மின்மோட்டார்கள், மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருப்பதை உறுதிசெய்துகொண்டார்.
இந்தச் சூழ்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் காயல்பட்டினம், ஆத்தூர், முக்காணி பகுதிகளில் கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், வருவாய் அலுவலர் விஷ்ணு சந்திரன் உள்ளிட்டோர் ஆய்வுமேற்கொண்டனர்.