தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக நான்கு மாதங்கள் மட்டும் திறக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு, தூத்துக்குடி மத்திய வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வினாயகமூர்த்தி, பண்டாரம்பட்டி கிராம மக்கள் ஒருங்கிணைப்பாளர் வசந்தி, வழக்குரைஞர்கள் ஹரி இராகவன், அதிசய குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "தூத்துக்குடியில் காற்றையும் நிலத்தையும் மாசுபடுத்திய ஸ்டெர்லைட் ஆலையை 15 உயிர்கள் பலியானதைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தால் இழுத்து மூடப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டம் என்பது எவ்வித அரசியல் கட்சிகளாலும் நடைபெறவில்லை. தன்னெழுச்சியாக மக்களாக முன்வந்து போராட்டம் நடத்தி ஆலையை மூடி உள்ளனர்.