தூத்துக்குடி:திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 70 நாட்களுக்குப் பின் கிலோவுக்கு 100 முதல் 150 ரூபாய் வரை மீன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. மீன்களின் விலை குறையத் துவங்கி உள்ளதால் பொதுமக்கள் ஏராளமானோர் மீன்களை வாங்க முனைப்புக் காட்டியுள்ளனர். மேலும் அப்பகுதியில் மீன்களின் விலை மந்தமான நிலையில் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.
தூத்துக்குடியில் கடந்த ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை, 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைகாலம் அமல்படுத்தப்பட்டது. இதனை முன்னிட்டு, விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாத காரணத்தினாலும், கேரள கடல் பகுதியில் கடந்த 20 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாத காரணத்தினாலும் தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடித்துள்ளனர். திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர்கள் பிடித்த மீன்களுக்கு, மீன்களின் வரத்து குறைவானதால் பொது மக்கள் மத்தியில் கடந்த 70 நாட்களாக நல்ல விலை கிடைத்துள்ளது. இதனால் மீன்களின் விலையும் உச்சம் கொண்டு இருந்தது.
இந்நிலையில், தூத்துக்குடி, திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக கடல் பகுதியில் காற்று வீசக்கூடும் என்ற காரணத்திற்காக கடலில் மீன்பிடிக்க, குறைவாகவே கடலுக்குள் சென்றனர். மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ் கடலுக்கு, மீன் பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகு மீனவர்கள் இன்று கரை திரும்பினர்.