தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ளது திரு. இராமையா பாகவதர் செந்தில்முருகன் நடுநிலைப்பள்ளி. 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில் 157 மாணவர்கள், 180 மாணவிகள் என மொத்தம் 337 பேர் கல்வி பயின்றுவருகின்றனர்.
நாடு முழுவதும் 71ஆவது குடியரசு தினவிழா இன்று கோலாகலாமாகக் கொண்டாடப்பட்ட நிலையில் இப்பள்ளியில், 7ஆம் வகுப்பு படித்துவரும் மாற்றுத்திறனாளி மாணவி சாய்பாலாவை தேசியக்கொடி பறக்கவைத்து ஊக்கப்படுத்தியுள்ளது பள்ளி நிர்வாகம்.
உறுதிமொழியேற்கும் மாணவர்கள் சிறப்புவிருந்தினருக்கு அளிக்கப்படும் வரவேற்பும், அனைத்து மரியாதையும் அளிக்கப்பட்டு உதவி தலைமையாசிரியை உமாவின் உதவியுடன் கொடியை பறக்கவிட்ட மாணவி சாய்பாலாவிற்கு பிற மாணவிகள் பரிசுகளும், இனிப்புகளும் வழங்கினர்.
இது குறித்து பள்ளி தலைமையாசிரியை உமா கூறுகையில், "1955ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி, திருச்செந்தூரிலுள்ள பழமையான பள்ளிகளில் ஒன்று. 7ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி சாய்பாலாவால் சராசரி மாணவர்களைப் போல சரளமாகப் பேச இயலாது. அதிக தூரம் நடக்க முடியாது. மாற்றுத்திறனாளியான இம்மாணவிக்கு படிப்பில் ஆர்வமுண்டு. பாடங்களைத் தொடர் கற்பித்தல் மூலம் கற்பித்துவருகிறோம்.
பிற மாணவர்களிடமிருந்து தானாகவே தன்னை விலக்கியும், விலகியும் செல்லும் இம்மாணவியை ஆசிரியைகள், மாணவர்கள் இணைந்து பல வழிகளில் ஊக்கப்படுத்திவருகிறோம்.
அதன் ஒருபகுதியாக இந்தாண்டு தேசியக்கொடி பறக்கவைத்திட சிறப்பு அழைப்பாளராக மாணவி சாய்பாலாவை அழைக்க முடிவெடுத்தோம். அம்மாணவியின் தாயாரிடம் இதைச் சொன்னபோது நெகிழ்ந்தே போனார். சிறப்பு அழைப்பாளரான மாணவியை ’பாரதமாதா’ வேடமணிந்து வரச் சொல்லி கூறினோம்.
பாரத மாத ஆடையில் நிற்கும் சாய்பாலா மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற மாணவியின் பெற்றோர், பாரதமாதா வேடமணிந்து காலையில் 8 மணிக்கெல்லாம் பள்ளிக்கு அழைத்துவந்தனர். மாணவி சாய்பாலா, பாரதமாதா வேடமணிந்து வந்ததைப் பார்த்த பிற மாணவர்கள் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர்.
கொடி பறக்கவிடுகையில் அம்மாணவிக்கு உதவியாக நின்றேன். கொடியேற்றிய மாணவி சாய்பாலாவிற்கு பரிசு வழங்கப்பட்டது. அவருக்குப் பதிலாக 8ஆம் வகுப்பு மாணவன் அனந்த சுப்பிரமணியன் அப்துல்கலாம் அவர்களைப் பற்றி சிறப்புரை நிகழ்த்தினார். மாற்றுத்திறனாளி மாணவியை தேசியக்கொடி பறக்கவைத்ததில் பெருமைகொள்கிறோம்" என்றார்.
மாணவிக்கு உற்சாகமளிக்கும் தலைமையாசிரியை திருச்செந்தூரில், முதன்முதலில் தொடங்கப்பட்ட பழமையான ஸ்ரீ சரவணய்யர் நடுநிலைப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும், குடியரசு, சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் தேசியத் திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவன் அல்லது மாணவியை கொடியேற்ற வைத்து கெளரப்படுத்திவருவது வழக்கம். தற்போது இப்பள்ளியில், மாற்றுத்திறனாளி மாணவியை கொடி பறக்கவைத்த நிகழ்ச்சி நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.