மூலஸ்தான பூஜையில் போத்திகள்:திருச்செந்தூர் முருகன் கோயிலைப் பொறுத்தவரையிலும் தொட்டு பூஜிக்க இரண்டு வகையான சாதியினர் அனுமதிக்கப்படுகின்றனர். மூலஸ்தான பூஜையில் போத்திகள் ஈடுபடுகின்றனர். இவர்கள் கேரளாவைப் பூர்வீகமாக கொண்டவர்கள். மூலஸ்தானத்தில் சிவலிங்கத்தை பூஜிக்கும் தோற்றத்தில் காணப்படும் முருகனின் சிலைக்கு அபிஷேகம், ஆராதனை அனைத்தும் இவர்கள் மூலமாகவே நடக்கும். இதே போன்று ஆஸ்தான உற்சவரான சண்முகரை தொட்டு வழிபட "பட்டர்கள்" எனப்படும் சிவாச்சாரியார்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
திரிசுதந்திர கைங்கரியம்:மூலஸ்தானம், ஆஸ்தான உற்சவர் என இரண்டு வழிபாட்டிலும் இல்லாவிட்டாலும், பெயருக்கேற்றவாறு கோயிலில் சர்வசுதந்திரத்துடன், பாரம்பரியமாக உரிமையோடு வலம் வந்தவர்கள் தான் திரிசுதந்திரர்கள். போத்திகள் மற்றும் பட்டர்களைக் காட்டிலும் எண்ணிக்கையில் இவர்கள் தான் அதிகம். கட்டளைதாரர்கள் கோயிலுக்கு வழிபாடு நடத்த வந்தாலும் திரிசுதந்திரர்கள் மூலமாகவே முருகனை தரிசிக்கின்றனர்.
கோயிலினுள் மகா மண்டபத்தில், பக்தர்களிடம் தேங்காய்ப்பழம் வாங்கி அர்ச்சனை செய்வதும் திரிசுதந்திரர்கள் தான். மூலஸ்தானத்தில் பூஜை செய்வது போத்திகள் என்றாலும்; பக்தர்களுடனான தொடர்பு, அர்ச்சனைகளை கையாள்வது என அனைத்தும் இவர்கள் தான். சுதந்திரமாக கோயிலில் வளைய வந்த திரிசுதந்திரர்களை டோக்கன் சிஸ்டம் முறையில் ஒருநாளைக்கு 100 பேர் மட்டுமே அனுமதி என சமீபத்தில் கிடுக்கிப்பிடி போட்டது, அறநிலையத்துறை. ஆனால், இது தங்களை பழிவாங்கும் நடவடிக்கை என அவர்கள் கூறுகின்றனர்.
பூர்வீக குடிகள் நாங்கள்:திரிசுதந்திரர்களின் பிரதிநிதியாக நம்மிடம் பேசிய திரு.ஈஸ்வர மூர்த்தி கூறுகையில், 'நிர்வாகத்தைச் சரி செய்கிறோம் என்ற பெயரில் திரிசுதந்திர பிராமணர்களாகிய எங்களை பழிவாங்கும் நடவடிக்கையாக இதைப் பார்க்கிறோம். நாங்கள் இக்கோயிலின் பூர்வீக குடிமக்கள். சின்ன சின்ன பிரச்னையை பெரிதுபடுத்துகிறார்கள். ஆனால், கோயிலில் இப்போது வரை பக்தர்களுக்கு கழிவு நீர், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லை.
ஊதியம் பெறாமல் உழைக்கிறோம்:நாங்கள் மாத ஊதியம் பெறாத பூர்வீகக் குடிமக்கள். கோயிலை வளர்த்தெடுத்ததில் எங்கள் முன்னோர்களுக்கும் பங்கு உண்டு. அதனால் தான் நகை பொறுப்பில் இன்றுவரை நாங்கள் இருக்கிறோம். தற்போது வரை எங்களிடம் இரண்டு சாவிகள் கையில் உள்ளன. எங்கள் சமூகத்தினர் வளர்வதை பிடிக்காமல் எங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எங்கள் மீது குற்றம்சாட்டுகின்றனர். நாங்கள் எல்லோரும் அதிமுக வாக்காளர்கள் என அவர்கள் கருதுகிறார்கள்.