தூத்துக்குடி: விளாத்திகுளத்தில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவர் காணாமல் போனதாக கூறி தனியார் நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளாத்திகுளம் அம்பாள் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55), இவருக்கு, காமராஜ் நகர் ரோஸ்லின் மருத்துவமனைக்கு பின்புறம் சொந்தமாக இடம் இருக்கிறது. இந்த நிலத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் சார்பில் செல்போன் டவர் ஒன்று அமைக்கப்பட்டது. இதற்காக 20 வருடங்கள் ஒப்பந்தம் போடப்பட்டு, ரூ.20 லட்சம் அந்நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் ஆய்வு செய்ய வந்தபோது செல்போன் டவர் அந்த இடத்தில் இல்லை என்பது தெரியவந்தது. செல்போன் டவர் அமைக்க அடிப்பகுதியில் இருந்த கான்கிரீட் தூண்கள் மட்டுமே காட்சி அளித்துள்ளது. இதை கண்டு அதிர்ந்த ஊழியர்கள், தனியார் நிறுவன மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.