தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச்சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் விசாரணையின்போது காவல் துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027 பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டமாக கூடுதலாக 400 பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த இரு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் 104 சாட்சிகளில் இதுவரை 46 சாட்சிகளிடம் சாட்சிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது இன்று(நவ-4)மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மத்திய சிறையில் உள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்களும் நேரில் ஆஜராகினர்.
சிறைவாசி ஆஜர்:இன்று நடைபெற்ற வழக்கின் சாட்சிய விசாரணையில் கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணை சிறைவாசியாக இருந்த ராஜாசிங் என்பவர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதனையடுத்து செய்தியாளர்களைச்சந்தித்து பேசியபோது, 'கோவில்பட்டி கிளைச்சிறையில் நடக்க முடியாமல் பலத்த காயத்தோடு முகத்தில் இரத்தம் வடிய ஜெயராஜும் பென்னிக்ஸ்ஸும் கோவில்பட்டி கிளை சிறைச்சாலைக்கு வந்தனர். இருவரும் மிகுந்த சோர்வுடன் இருந்தனர். சாப்பிடும் போது உங்களை யார் அடித்தார்கள் எனக்கேட்டேன். அதற்கு தந்தை, மகன் இருவரும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் அடித்தார்கள் எனக் கூறினர்.
அப்போது அவர்களிடம் பேசிய நான்(ராஜாசிங்) என்னையும் வழக்கு ஒன்று விசாரணையில் இருக்கும்போது கையில் ஓட்டை விழும் அளவிற்கு காவல் துறையினர் அடித்தார்கள் எனக்கூறினேன். ஆய்வாளர் ஸ்ரீதர் தூண்டுதலில் விடிய விடிய வைத்து என்னை அடித்ததாகவும் நான் மருத்துவர்களிடம் கூறினேன். என்னையும் (ராஜாசிங்) வழக்கு ஒன்றில் ஆய்வாளர் ஸ்ரீதர் தூண்டுதலின் பெயரில் சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உதவியோடு 3 நாட்கள் அடித்தார்கள் என்றார். சிறையில் தனி தனி அறை என்பதால் சாப்பிடும்போது தான் ஜெயராஜ் பென்னிக்ஸை சந்தித்துப்பேசினேன். அவர்களது கைலியில் இரத்தம் வடிந்த நிலையில் இருந்தது’ எனக் கூறினார்.
ரத்தத்துடன் வந்த ஜெயராஜ்-பென்னிக்ஸ்; சிறைவாசியின் முக்கிய சாட்சியம் இதையும் படிங்க:சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு... கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்