தூத்துக்குடி:முறப்பநாடு கோவில்பத்து கிராம முறப்பநாடு கோவில்பத்து கிராம வி.ஏ.ஓ லுார்து பிரான்சிஸ் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காகவும், மேலும் கனிம வளங்கள் கேரளாவிற்குக் கடத்தப்படுவதைத் தடுக்கக் கோரி தென்காசியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தூத்துக்குடி வந்தார்.
இன்று காலை (மே 28) சென்னையிலிருந்து தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்த இவருக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறுகையில், “கனிமவளம் கொள்ளை அதிகமாக நடந்து கொண்டு இருக்கிறது. இதைத் தடுக்க வேண்டும் எனத் தென்காசியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்தேன்.
தமிழகத்திலிருந்து அத்தனை வளங்களும் சுரண்டப்படுகிறது என்றால் கேள்வி கேட்க ஆள் இல்லையா? ஆளுங்கட்சியைக் கேட்டால் முன்னர் ஆட்சி செய்த கட்சியினர் தான் அனுமதி கொடுத்ததாக கூறுகின்றனர். எதிர்க்கட்சியினர் ஆளுங்கட்சியைக் கூறுகின்றனர். இவ்வாறு இரண்டு கட்சிகளும் மாறி மாறி குறை சொல்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதைத் தட்டிக் கேட்ட ஒரு நியாயமான அதிகாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது எந்த வகையில் நியாயம்? உண்மையானவர்களுக்கும், நேர்மையானவர்களுக்கும் இந்த நாட்டில் இடம் இல்லையா? என்ற கேள்விக்குறி வந்துள்ளது. வி.ஏ.ஓ குடும்பத்தினருக்கு முதல்வர் ஒரு கோடி அறிவித்துள்ளார். இதனால் போன உயிர் திரும்ப வந்துவிடுமா?
நியாயமாக உழைக்கும் அதிகாரிகளுக்கு என்ன இருக்கிறது. ஆகவே, மனதுக்குக் கஷ்டமாக உள்ளது. தமிழகம் எல்லா விதத்திலும் முன்னேற வேண்டும் என்றால் மக்கள் மாற வேண்டும். ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிப்பது, ஓட்டுக்குப் பணம் வாங்குவது என்னும் இந்த நிலை மாறினால் தான் தமிழகம் முன்னேறும்” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடந்தது தொடர்பான கேள்விக்கு? “செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடந்தது. காவல்துறை இது குறித்துக் கூறும் போது, எங்களுக்கு சோதனை பற்றி எவ்வித தகவலும் கொடுக்கவில்லை. முன்னரே தகவல் கொடுத்திருந்தால் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அளித்திருப்போம் என்றனர்.
ரெய்டு என்றால் என்ன என ஒரு காவல்துறை அதிகாரிக்குத் தெரியாதா? யாருக்கும் சொல்லாமல் திடீரென்று வருவது தான் ரெய்டு, இதிலிருந்தே அரசியல் வாதிகளுக்கு எந்த அளவுக்கு ஒரு கை பாவையாக காவல்துறை மாறி உள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு இல்லை. கனிமவள கொள்ளையைத் தடுக்கின்ற வி.ஏ.ஒ க்கு பாதுகாப்பு இல்லை.