தூத்துக்குடி:தமிழ்நாட்டில் பணிபுரியும் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில வதந்தி வீயோக்கள் பரவி தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த வீடியோ வெறும் வதந்தி என்றும், இந்த சம்பவம் தமிழ்நாட்டில் இல்லை வேறு எங்கோ நடந்த சம்பவம் என்றும், அனைத்து வடமாநில தொழிலாளர்களும் பாதுகாப்புடன் இருக்கின்றனர் என்றும் தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகு இந்த வதந்தி பரப்பிய நபர் குறித்து காவல்துறை மற்றும் சைபர் கிரைம் போலீசார் தேடிவந்தனர். பின்னர் அவர் உத்திரப்பிரதேசத்தை பிரசாந்த் உம்ராவ் என்பவதும் அவர் அம்மாநில பாஜக செய்தித் தொடர்பாளராக இருப்பதும் தெரியவந்தது.பிரசாந்த் உம்ராப் மீது தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தற்போது இந்த வழக்கு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு பிரசாத் உமராவ் மனு தாக்கல் செய்திருந்தார். இதை அடுத்து மதுரை உயர் நீதிமன்றம் பிரசாந்த் உம்ராவ் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தொடர்ந்து 15 நாட்கள் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பிரசாத் உம்ராவ் இந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.