தூத்துக்குடி:குமரிக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் இடைவிடாத மழை பெய்தது. தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான பூவை.மு.ஜெகன் மூர்த்தி நேற்று நிவாரணப் பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது, “இயற்கையின் சீற்றத்தால் தென் மாவட்டங்கள் சீரழிந்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை நீர் வடியவில்லை. கடந்த ஒரு வார காலமாக வீட்டின் கூரை மேல் உட்கார்ந்து, மக்கள் உயிரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கனமழையால் ஆடுகள், மாடுகள், கோழிகள் என பல்வேறு உயிரிச் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வாகனங்கள், உடைமைகளை இழந்து மக்கள் நிர்கதியாக நிற்கின்றனர். மூன்று வேளை சோற்றுக்கு கையேந்தும் நிலை தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது.
எனவே, அரசாங்கம் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண முகாம்கள் அமைத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான தண்ணீர், உணவு, உடை ஆகியவற்றை வழங்க வேண்டும். மேலும், அரசு வழங்கும் நிவாரணத் தொகையான 6 ஆயிரம் ரூபாயை உயர்த்தி, 15 ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும்.