பாஜக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு தூத்துக்குடி:முன்னாள் பாஜக மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஆர்.சரவண பெருமாளின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாஜக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் பத்திரிகையாளர் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, 'சில ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கலம் ஃபார்முலா என்ற ஃபார்முலாவை உலகத்தில் முதன்முறையாக அரசியலில் கொண்டு வந்து புகுத்தியது, திராவிட முன்னேற்றக் கழகம்' என பதில் அளித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், தற்போது 100 திருமங்கலம் ஃபார்முலாவை மிஞ்சக் கூடிய அளவிற்கு ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றப் பகுதியில் பணப்பட்டுவாடா மற்றும் பொது மக்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்று செய்தி மூலம் அறிந்ததாக கூறினார். எனவே, இப்படி ஒரு தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு தேவைதானா எனற கேள்வி அனைவரது மனநிலையிலும் உள்ளதாகவும், மேலும் இந்த தொகுதியில் கூட்டணி கட்சியான அதிமுக போட்டியிடுவதால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிந்தித்து முடிவு எடுப்பார் எனவும் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து அதிமுக பிளவுபட்டு நிற்பதற்கு பாஜக காரணம் என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, அதிமுக முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் அமமுக கட்சித் தலைவர் தினகரன் ஆகியோர் யாரும் இது குறித்து சொல்லவில்லை என தெளிவுபடுத்திய பொன்.ராதாகிருஷ்ணன், ஆளுங்கட்சியான திமுகவினர் சொல்லியிருந்தால் முதலில் தங்கள் கட்சியை பாருங்கள் என்றும், திமுக எத்தனை கூராகப் பிரிந்தது மற்றும் பிரிவதற்குத் தயாராக உள்ளது என்பதை கவலையுடன் பாருங்கள் எனவும் பதில் அளித்தார்.
அதேநேரம் அதிமுக, மதிமுக போன்று பல கட்சிகள் உருவாக வாய்ப்புள்ளது என எச்சரித்த அவர், அதிமுக பிரிந்தது, திமுக பிரித்து விட்ட காரணத்தினால் மட்டுமே என்றும் கூறினார். இதனையடுத்து ராணுவ வீரர் கொலைச் சம்பவம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், ராணுவ வீரர் நாட்டிற்காக உழைக்கக் கூடியவர் என்றும், குடும்பம், குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படாமல் ஊருக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்றும், அவர்கள் மேல் பிரச்னை இருந்தால் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறிய அவர், காவல் துறையே எடுக்காத நடவடிக்கைகளை திமுக கவுன்சிலர் எடுத்திருக்கிறார் என்றால், இதற்கு திமுக பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் ஆவேசமாகப் பேசினார்.
இதையும் படிங்க:ஈரோடு கிழக்கு தேர்தலை நிறுத்தக்கோரி தேர்தல் ஆணையத்தில் புகார்!