தூத்துக்குடி வக்கீல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் சுட்டு பிடித்தனர் தூத்துக்குடி: அய்யனடைப்பு சோரீஸ்புரம் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (43). இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நகைக் கடன் வழங்கும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி பிற்பகல் அவர் கடையில் இருந்த போது 3 இருசக்கர வாகனங்களில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் அவரை சரமாரியாகத் தாக்கி கொலை செய்தது.
இச்சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்தவர்களை கைது செய்வதற்காக தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சண்முகம், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் அடங்கிய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதில் வழக்கறிஞர் முத்துக்குமாரின் தம்பி சிவக்குமாரை கடந்த 2019ம் ஆண்டு தூத்துக்குடி நீதிமன்றம் அருகில் வைத்து கொலை செய்த வழக்கில் தொடர்புடைய ட்ட ராஜேஷ் மற்றும் பீட்டர் ஆகியோருக்கு ஜாமீன் கிடைக்க விடாமலும், வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வந்ததாகவும் கோரம்பள்ளம் ராஜேஷ், பீட்டர் மற்றும் அவரது உறவினர்களின் தூண்டுதலின் பேரில் இந்த கொலை நடந்தது தெரிய வந்ததாக போலீசார் கூறினர்.
இந்த கொலையில் தொடர்புடையவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் ஆறுமுகநேரியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் இலங்கேஸ்வரன் (29), அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த காமராஜ் மகன் இராஜரத்தினம் (29), ஆறுமுகநேரியைச் சேர்ந்த சிங்கராஜா மகன் வேல்முருகன் (29), செல்வக்குமார் மகன் முத்துராஜ் (23) மற்றும் கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் ரமேஷ் (49), கூட்டாம்புளியைச் சேர்ந்த நமோநாராயணன் (33), ஆறுமுகநேரியைச் சேர்ந்த பாஸ்கர் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முக்கிய குற்றவாளியான ஜெயப் பிரகாஷை தட்டப்பாறை அருகே காட்டுப் பகுதியில் வைத்து கைது செய்ய முயன்ற போது, காவல் துறையினரை தாக்கி விட்டு தப்ப ஓட முயன்றதாக கூறப்படுகிறது. இதில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜெயபிரகாஷ் காலில் காயம்பட்டது.
இதனையடுத்து ஜெய பிரகாஷை கைது செய்த போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். மேலும் ஜெய பிரகாஷ் தாக்கியதில் காயம் அடைந்த உதவி ஆய்வாளர் ராஜ பிரபு மற்றும் காவலர் சுடலை மணி ஆகியோரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜெயபிரகாசால் தாக்கப்பட்டு காயமடைந்த போலீசாரை தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்.. வாடகைக்கு வீடு எடுத்து போலி வீடியோ.. 3 பேர் கைது!