தூத்துக்குடி: நாசரேத் அருகே உள்ள மூக்குபீறியில் வசித்து வரும் ராஜ்(35) என்பவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி திவ்யா(32). இந்த தம்பதியினருக்கு ரகு என்ற ஆண் குழந்தையும், ரஞ்சனி என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இவரது மனைவி திவ்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், இவர் கடந்த 3 வருடங்களாக மனைவியைப் பிரிந்து அவரது தாயுடன் மூக்குப்பீறி என்ற கிராமத்தில் வசித்து வந்தார்.
இதைத்தொடர்ந்து இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (நவ.12) மாலையில் வெளியே சென்ற ராஜ், வெகுநேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லை. இதையடுத்து ராஜ்-ன் தாயார் ராஜ்-ஐ பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று(நவ.13) காலை அவர் நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி சுடுகாட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்ததையடுத்து நாசரேத் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், ராஜ்-ன் உடலை மீட்டு உடற் கூராய்விற்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, ராஜ் கொலைச் சம்பவத்தில் பல்வேறு மர்மங்கள் நிறைந்திருந்த நிலையில், கொலைக்கான காரணம் குறித்துக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக சம்பவ இடத்தில் கொலைக்கான காரணம் குறித்துக் காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அவரது கழுத்தில் இறுக்கப்பட்ட காயமும், உடலில் ரத்த காயமும் இருந்தது தெரியவந்தது. இதனால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகத்தில் காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் இந்த கொலைக்கான காரணம் மற்றும் எவ்வாறு கொலை செய்யப்பட்டிருக்கிறார், யார் இதைச் செய்தது போன்ற பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:திருப்பத்தூரில் நடந்த கொடூரம்..! காதல் விவகாரத்தில் இளைஞரை அடித்துக் கொன்ற ஐந்து பேர் கைது..!