தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவருடைய மனைவி முத்துராணி(வயது 26). இந்த தம்பதிக்கு ஆண்குழந்தை உள்ள நிலையில், தற்போது முத்துராணி ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார். சின்னத்துரை சென்னையில் காவலராக பணியாற்றிவருகிறார். பணி நிமித்தம் காரணமாக சின்னதுரை சென்னையிலும், முத்துராணி அவருடைய உறவினர் கருப்பசாமியின் பராமரிப்பில் சந்தோஷ் நகரிலும் வசித்து வந்தனர்.
கரோனா பணி ஊரடங்கு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சின்னதுரை-முத்து ராணியும் செல்போன் மூலமாக நலம் விசாரித்துவந்தனர். இந்நிலையில் நண்பர் ஒருவரின் உதவியோடு சின்னதுரை சென்னையிலிருந்து கார் மூலம் நேற்று தூத்துக்குடி வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பணிக்காக இன்று அவர் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.
காவலர் சின்னதுரை, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வந்த தகவல் அக்கம்பக்கத்தினர் மூலமாக கிராம நிர்வாக அதிகாரிக்கு தெரியவந்துள்ளது. அதன்பேரில் வீட்டிற்கு வந்து ஆய்வு செய்த அலுவலர்கள் வீட்டில் உள்ள அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி விட்டு சென்றுள்ளனர்.