தூத்துக்குடி: விளாத்திகுளம் ஹை ஸ்கூல் தெருவைச் சேர்ந்த நெப்போலியன் என்பவரது மகன், பசும்பொன் முத்துராமலிங்கம் (38). இவர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் ஒட்டப்பட்டிருந்த வெளிநாட்டு வேலைக்கான விளம்பர நோட்டீஸைப் பார்த்து, நியூசிலாந்து நாட்டிற்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்று கருதி, அதில் இருந்த தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது, சிவகங்கை மாவட்டம் T.புதூர் ஆக்ஸ்போர்டு நகரைச் சேர்ந்த காசி என்பவரின் மகன் ரகுபதிராஜன் (48) என்பவர், வெளிநாட்டில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால், 4 லட்சம் ரூபாய் செலவாகும் எனக் கூறியுள்ளார். அதன் பின்னர், பசும்பொன் முத்துராமலிங்கத்தை நம்ப வைப்பதற்காக போலியான பணி நியமன மற்றும் அனுமதி ஆணைகளை அனுப்பியுள்ளார்.
பின்னர் அவரிடமிருந்து, கடந்த ஜனவரி 21ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை மொத்தம் 4 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால், நீண்ட நாட்களாக வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ரகுபதிராஜன் ஏமாற்றி வந்துள்ளார்.
அதனை அடுத்து, தன்னை ரகுபதிராஜன் ஏமாற்றியதை அறிந்த பசும்பொன் முத்துராமலிங்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரை விசாரித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன், மோசடி சேய்த ரகுபதிராஜனைப் பிடிக்க, மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சிவசுப்பு மேற்பார்வையில் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.