தூத்துக்குடி:திருச்செந்தூர் அருகே உள்ள வன்னிமாநகரத்தை சேர்ந்தவர் வேம்படிதுரை (40). இவர் சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவர் உறவினர் இறப்பிற்கு சொந்த ஊரான வன்னிமாநகரத்திற்கு நேற்று (நவ.05) வந்துள்ளார். இறந்த உறவினர் உடல் அடக்கம் முடிந்த பிறகு வன்னிமாநகரம் வள்ளிவிளை சாலையில் உள்ள தோட்டத்தில் குளித்து விட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது ஏதிரே காரில் வந்த மர்ம நபர்கள் வேம்படிதுரை இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளனர்.
இதில் தூக்கி வீசப்பட்ட வேம்படிதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்திற்கு பயன்படுத்திய கார சாலையோரம் மண்ணின் புதையுண்டு சிக்கிக்கொண்டதால் மர்மநபர்கள் காரை எடுக்க முடியாமல் அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வேம்படிதுரை உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், 7 வருடங்களுக்கு முன்பு நடந்த கொலைக்கு பழிவாங்கும் விதமாக வேபடிதுரை கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.