நாடு முழுவதும் 72ஆவது குடியரசு தின விழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தருவைகுளம் மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் காவல் துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. குடியரசு தின விழாவையொட்டி பொதுமக்களுக்கு அரசு நலத்திட்டங்களும் வழங்கப்பட்டன. இதைப்போல தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் பொறுப்பு கழக துறைமுகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் துறைமுக பொறுப்பு கழக தலைவர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து அவருக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு மரியாதை வழங்கினர். இதையடுத்து நடைபெற்ற நிகழ்வில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் கரோனா ஊரடங்கு காலகட்டத்திலும் துறைமுகத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றிய துறைமுக ஊழியர்கள், கன்டெய்னர் போக்குவரத்து நிறுவனத்தினர், ஒப்பந்ததாரர்கள், ஏற்றுமதி இறக்குமதி முகவர்கள் உள்ளிட்டோருக்கு நினைவுப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் துறைமுக பொறுப்பு கழக தலைவர் ராமச்சந்திரன் பேசுகையில், “ கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் உலகளாவிய அளவில் சரக்குப் போக்குவரத்து மந்த நிலையை எட்டியதால் நமது நாட்டிலும் அதன் பிரதிபலிப்பு இருந்தது. தூத்துக்குடி பாபு சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்கு கையாளுகை கடந்த ஆண்டை காட்டிலும் 12.25 சதவீதம் குறைந்துள்ளது. துறைமுகத்தில் மூன்றாவது சரக்கு பெட்டக முனையத்தை ஒன்பதாவது கப்பல் தளத்தில் ரூ.435 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.