தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள சங்கரபேரி கிராமத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடுத் தொகை பெற்றுத்தரவும், கோட்டக்கல் பஞ்சாயத்திற்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கி இருப்பதால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்பை சீர் செய்ய வலியுறுத்தியும் கிராம பொதுமக்கள் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை சந்தித்து மனு அளித்தனர்.
பயிர் காப்பீட்டுத் தொகை பெற்றுத்தர மாவட்ட ஆட்சியரிடம் மனு! - சங்கரபேரி கிராமம்
தூத்துக்குடி: பயிர் காப்பீட்டுத் தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கரபேரி கிராமத்தை சேர்ந்த லதா கூறுகையில் "கடம்பூர் அருகே உள்ள சங்கரபேரி கிராமத்தில் மானாவாரி பயிர் விவசாயம் செய்துவரும் விவசாயிகளுக்கு காப்பீடு தொகை பெற்றுத் தரப்படவில்லை. மழையினால் பயிர்கள் நாசமடைந்துள்ள நிலையில் இழப்பீட்டு தொகையை பெற்றுத் தர அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கோட்டக்கல் ஊருக்கு செல்லும் ரயில்வே பாதையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக ரயில்வே நிர்வாகத்தால் மாற்றுப்பாதை ஏற்படுத்தித் தந்துள்ளனர். இந்த பாதையினை நிரந்தரமாக பயன்படுத்திட ஆட்சியர் ஆவண செய்ய வேண்டும்" என்றார்.