தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மனைவி உமயபார்வதி (65). இவருக்கு எழுத படிக்கத் தெரியாது. இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தொழிலாளர் நலத்துறை நலவாரியம் மூலம் ஓய்வூதியம் வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில், ஓய்வூதியம் வங்கியில் கடந்த மார்ச் மாதம் முதல் வரவு வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து தூத்துக்குடி தொழிலாளர் துறை அதிகாரிகளிடம் பலமுறை கேட்ட போதும் உரிய பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், இவருக்கு எழுத படிக்க தெரியாததால் இவரது சகோதரர் மூக்காண்டி என்பவர் மூலம் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு, இது குறித்து தனது கோரிக்கை மனுவினை எழுதி, அஞ்சல் மூலம் அனுப்பி உள்ளார்.
ஆனால், தபாலானது முதலமைச்சர் தனிப்பிரிவுக்குச் சென்ற நிலையில், அந்த தபால் மறுக்கப்பட்டதாகக் (Refused) கூறி, தபால் அலுவலகப் பணியாளர்களால் மறுபடியும் உமயபார்வதி வீட்டிற்கேத் திரும்ப வந்துள்ளது. அஞ்சல் கவரில் தபால் மறுக்கப்பட்டதாக கூறும் வகையில் Refused என்று எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.