தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 29, 2021, 6:05 AM IST

ETV Bharat / state

ஸ்டெர்லைட் போராளிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்: பொதுமக்கள் போராட்டம்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் போராளிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தி பொதுமக்கள் நூதனப் போராட்டம் நடத்தினர்.

பொதுமக்கள் போராட்டம்
பொதுமக்கள் போராட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 13 பேர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தப் போராட்டம் குறித்து சிபிஐ விசாரணை நடத்திவருகிறது.

முதல் கட்டமாக போராட்டத்தில் ஈடுபட்ட 71 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், சமூக போராளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் போராட்டம் நடைபெற்ற பண்டாரம்பட்டியில் பொதுமக்கள் நேற்று (மார்ச் 28) வாயில் கருப்புத் துணி கட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் போராட்டம்

இது குறித்து செய்தியாளர்களிடம் பொதுமக்கள் கூறுகையில், "ஸ்டெர்லைட் ஆலை குறித்து பேசினால் பொதுமக்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் நிலை உள்ளது. இதனைக் கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டோம்.

வருகின்ற 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எந்த ஒரு கட்சியும் ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றுவோம் என வாக்குறுதி அளிக்கவில்லை.

கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள் இந்த வாக்குறுதியை அளிக்க தயங்குகின்றன. இந்நிலையில் சிபிஐ போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

போராட்டத்தின்போது துப்பாக்கியால் சுட்டு 13 பேரை கொன்ற காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் அதை கண்ணால் பார்த்தேன் என சாட்சி சொன்னவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இது கண்டிக்கத்தக்கதுடன் மிக வருத்தத்தை அளிக்கிறது. எங்கள் கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியாக அளிக்கும் கட்சிக்கே எங்களது ஓட்டு, இல்லையெனில் தேர்தல் முடிவுகள் எங்களுடைய முடிவை சொல்லும் விதத்தில் இருக்கும்" என்றனர்.

இதையும் படிங்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு - கலவரம் - குற்றப்பத்திரிகையில் உள்ள 71 பேர் யார் யார்?

ABOUT THE AUTHOR

...view details