தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு அக்கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், தனியார் திருமண மண்டபத்தில் தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டத்தில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, "அலிபாபாவுக்கே 40 திருடர்கள்தான். இங்கு 234 பேர் உட்கார்ந்து கொண்டுள்ளனர். நதிகளை எல்லாம் சாக்கடைகளாக மாற்றி, நல்லவர்களை எல்லாம் கெட்டவர்களாக்கி, நேர்மையானவர்களையெல்லாம் ஊழல்வாதிகளாக மாற்றி ஆட்சி செய்து என்ன பயன். நாடு நாசமாகப் போகட்டும் என்று மக்கள் ஏன் இன்னும் சபிக்காமல் இருக்கிறார்கள். எனக்கு சாபத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால், செயலில் நம்பிக்கை உண்டு.
அரசியல் கட்சியினரின் சுயநல வேட்டைக்கு மக்கள் பலியாகி விடக்கூடாது - கமல் ஹாசன் ஊழலை ஒழிப்பது மேல்மட்டத்தில் இருந்து நடக்க வேண்டும். அரியணையில் அமரவே நேரமில்லாமல் வேலை செய்தால்தான் நாடு சற்று முன்னேற்றம் அடையும். ஊழல்தான் உலகம் என்று யாரும் முடிவெடுக்கவில்லை. நேர்மையாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையை நாம் வீண்போக விட்டுவிடக்கூடாது. காந்தியை போன்ற இன்னொரு ஆள் வர முடியுமா என்றால் நிச்சயம் வர முடியும். அதற்கு மக்கள் வழிவிட வேண்டும்.
ஓட்டுக்கு காசு கொடுப்பது மக்களை ஏமாற்றும் செயல். உங்களின் பாக்கெட்டில் இருந்து எடுத்த பணத்தை உங்களின் மற்றொரு பாக்கெட்டுக்கு தருகிறார்கள். அப்படியே அந்த பணத்தை வாங்குவதாக இருந்தால் ஐந்தாயிரம் ரூபாய் போதாது. ரூ. 5 லட்சம் வாங்குங்கள். உங்கள் மதிப்பை நீங்களே உயர்த்திக்கொண்டால்தான் உயரும். வாக்குக்கு பணம் கொடுப்பது ஒன்றும் தர்ம காரியம் இல்லை. இது எல்லாம் சுயநல வேட்டை. அதற்கு மக்கள் பலியாகிவிடக்கூடாது" என்றார்.
இதையும் படிங்க:யாருடைய விடுதலைக்காகவோ ஓ.பி.எஸ் காத்திருப்பதுபோல் தெரிகிறது - கமல் ஹாசன்