தூத்துக்குடி: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகாவில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் மதிய உணவு மையங்களுக்கு வழங்கப்பட்ட 2,115 முட்டைகள், வேகவைத்தபோது அழுகிய நிலையில் காணப்பட்டன. அதனைத் தொடர்ந்து 3 நாட்களாக மாணவ, மாணவியருக்கு மதிய உணவில் முட்டை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மற்றும் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், தூத்துக்குடியில் நேற்று முன்தினம் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனிடம் பாஜக தலைவர் அண்ணாமலையின் புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதாஜீவன், "முட்டை விநியோகம் செய்பவர் முட்டைகளை மாற்றி கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து அவர்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளோம்.
முட்டையை உணவு பாதுகாப்பு துறையினர் பரிசோதனை செய்தனர். தமிழ்நாடு அரசுக்கு முட்டை விநியோகம் செய்பவர் திங்கள் புதன், சனி அல்லது வெள்ளி ஆகிய மூன்று நாள் கொண்டு வருவார். அதில் ஒவ்வொரு தினத்திற்கும் ஒவ்வொரு கலரில் முத்திரை வைக்க வேண்டும். ஏனென்றால் பழைய முட்டை உபயோகப்படுத்திவிட கூடாது என்ற காரணத்தால், ஆகவே, அன்று முட்டையில் கருப்பு கலர் மையில் முத்திரை வைத்து இருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசு என முட்டையில் போடப்பட்டு இருந்தது. அன்று மழையில் தார்பாய் இல்லாமல் வண்டி வந்துருக்கு. அப்போது கருப்பு மை மழை நீரில் ஊறி முட்டையில் கருப்பு கலர் இறங்கி உள்ளது. இது குறித்து உணவு பாதுகாப்பு துறை ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டாச்சு. எதிலாவது குற்றச்சாட்டு கண்டு பிடிக்கலாம் என இருந்தவர்கள் இதை பெரிய பிரச்சனை ஆக்கினார்கள். ஆனால் உண்மை நிலவரம் அவ்வாறு அல்ல. சமூக நலத்துறை முறையாக செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு நல்ல அவித்த தரமான முட்டை வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்திருந்தார்.