தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் சீனக் கப்பல் வருகையால் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை!

தூத்துக்குடி: சிதம்பரனார் துறைமுகத்திற்கு வந்த சீனக் கப்பலால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் எனும் தகவல் தவறானது என, தூத்துக்குடி துறைமுக அலுவலர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

people no need to fear coronavirus affect on china ship landed in thoothukudi chidambaranar port !
தூத்துக்குடி சிதம்பரனார் துறைமுகம்

By

Published : Feb 16, 2020, 6:04 PM IST

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாக திகழ்ந்துவருகிறது. சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், பனாமா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இங்கிருந்து நேரடியாக சரக்கு கப்பல் போக்குவரத்து மேற்கொள்ளப்படுகிறது.

இங்கு நிலக்கரி, இரும்பு தளவாடங்கள், காற்றாலை நிறுவனங்களுக்கு தேவையான தளவாடங்கள், எந்திரங்கள், மின்னணு சாதனங்கள், துணிகள், மரப் பொருள்கள், வணிகரீதியாக நறுமண பொருள்கள் உள்ளிட்டவையும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு சீன நாட்டு சரக்கு கப்பல் ஒன்று வந்து சேர்ந்தது. சீன நாட்டில் "கொவைட்-19" (கொரோனா வைரஸ்) பாதிப்பினால் 500-க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில், துறைமுகத்திற்கு வந்த கப்பலால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து சென்ற சீனக்கப்பலில் இருந்து முகமூடி அணிந்தபடியே இறங்கும் கப்பல் ஊழியர்.

"கொவைட்-19" வைரஸ் காய்ச்சலுக்கு தற்போதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில் அந்நோயை தடுக்கும் வகையில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மருந்து கண்டுபிடிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் சீன நாட்டிலிருந்து வணிக ரீதியாகவும், உள்நாட்டு, அயல்நாட்டுறவு ரீதியாகவும், சீனாவுக்கு போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.

சீன எல்லைகள் மூடப்பட்டு "கொவைட்-19"வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்து நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சீனாவிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த கப்பலில் உள்ள மாலுமிகளில் யாருக்காவது வைரஸ் பாதிப்பு இருக்கலாமோ என்ற அச்சம் காட்டுத் தீயாய் தூத்துக்குடி மாவட்டத்துக்குள் பரவியது. அடுத்தடுத்து பத்திரிகைகளிலும் இதுதொடர்பான செய்தி வெளியாகி பெரும் பீதியை கிளப்பியது.

இதுதொடர்பாக தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக அலுவலர் ஒருவர் தெரிவித்ததாவது,

"துறைமுகத்திற்கு சீன நாட்டிலிருந்து காற்றாலை தளவாடங்களை ஏற்றிக்கொண்டு ஐந்து நாட்களுக்கு முன்னதாக கப்பல் ஒன்று வந்தடைந்தது. இதில் 15 சீன மாலுமிகள் உள்பட மொத்தம் 19 பேர் தூத்துக்குடி துறைமுகம் வந்தனர்.

சீன நாட்டில் "கொவைட்-19" வைரஸ் காய்ச்சலால் பலர் இறந்திருக்கக்கூடிய இந்நேரத்தில் சீனக் கப்பல் துறைமுகம் வந்திருப்பது தொடர்பாக பத்திரிகைகளில் பலரும் செய்தி வெளியிட்டிருந்தன. அந்த செய்திகள் யாவும் உண்மைக்கு புறம்பானது. தவறான தகவல்களை செய்தியாக வெளியிட்டுள்ளனர்.

"கொவைட்-19" வைரஸ் பரவாமல் தடுக்கும்விதமாக, நமது அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் எந்தவித பாதுகாப்புமின்றி சீனக் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ளது என்று கூறுவது தவறானது.

ஏனெனில் சரக்குகளை ஏற்றி வந்த சீனக் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருவதற்கு முன்பாகவே அந்த கப்பலில் உள்ள அணைத்து மாலுமிகளுக்கும் "கொவைட்-19" வைரஸ் பாதிப்பு உள்ளதா என முறையாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அந்த மருத்துவ பரிசோதனையில் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்பே, கப்பல் துறைமுகத்திற்குள் வர அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும் சரக்கு கப்பலில் உள்ள மாலுமிகள் துறைமுகத்திற்குள் தரையிறங்குவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அவர்கள் கப்பலின் உள்ளேயே இருந்து வேலைகளை கவனிக்க அறிவுறுத்தப்பட்டனர். மேலும் துறைமுக மருத்துவக் கண்காணிப்பு குழுவினரும் அவர்களை பரிசோதனை செய்து எந்தவித வைரஸ் பாதிப்புமில்லை என உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனால் சீனக் கப்பலில் வந்தவர்கள் நகருக்குள் வர உள்ளதாகவும், அதனால் வைரஸ் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாகவும் பீதியை ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிடப்பட்டது தவறானது. தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த சீனக் கப்பலின் ஒவ்வொரு நகர்வும் டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலர்களால், அதி தீவிர கண்காணிப்பிலேயே அந்த கப்பல் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டது. சரக்குகளை ஏற்றி வந்த சீனக் கப்பல் தனது பணியை முடித்துக்கொண்டு இன்று காலை ஆறு மணிக்கெல்லாம் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து தாயகம் திரும்பி சென்றுவிட்டது என்றார்."

இதையும் படிங்க:ஜப்பான் கப்பலில் தொடரும் கொரோனா - 355 பேர் பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details