தூத்துக்குடி:குமரிக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 17, 18ஆம் தேதிகளில் இடைவிடாத மழை பெய்தது. தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்த கனமழையில், தூத்துக்குடி மாவட்டத்தில், ஆறுகளின் கரையோரம் இருக்கும் அனைத்து கிராமங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்தது. அந்த வகையில், திருச்செந்தூரில் உள்ள காயல்பட்டினத்தில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்தது. இங்கு பெய்த கனமழையால் காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 93 செ.மீ மழை பதிவானது. இதனால் காயல்பட்டினம் பகுதி முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காயல்பட்டினம் வந்தார். அவருடன் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவசங்கர், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வருகை புரிந்தனர்.