தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியம் இலுப்பையூரணி கிராமத்தில் நத்தம் புறம்போக்கு பகுதிகள், ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பட்டா வழங்கிய நிலையில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கேயே வசித்துவரும் இலுப்பையூரணி மக்களுக்கு மட்டும் பட்டா வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பாக பலமுறை கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டிய கிராம மக்கள் aதனைக் கண்டித்தும், வீட்டுமனைப் பட்டாக்களை வழங்க வலியுறுத்தியும் இலுப்பையூரணி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சந்தானம் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பட்டா வழங்காததைக் கண்டித்து வட்டாட்சியரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்! இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இலுப்பையூரணி மக்களின் கோரிக்கை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய தீர்வு காணப்படும். வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதுகுறித்து இலுப்பையூரணி கிராமத்தைச் சேர்ந்த சந்தானம், “ஒவ்வொரு முறையும் மக்கள் குறைக் கேட்பு கூட்டத்தில் பட்டா வழங்க கேட்டு மனு அளித்து வருகிறோம். ஆனால் இதுவரை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விரைவாக அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். இல்லையெனில் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம், சாகும் வரை உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்களை நடத்துவோம்” என்றார்.
இதையும் படிங்க :’அதிமுக முதலமைச்சர் வேட்பாளரை ஏற்றால்தான் கூட்டணி’