தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பேய் குளத்தைச் சேர்ந்தவர் ராஜசிங் என்பவரை கொலை வழக்கு தொடர்பாக, கடந்த மே மாதம் 18ஆம் தேதி சாத்தான்குளம் காவலர்கள் கைது செய்து காவல் நிலையத்தில் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர், அவரை கோவில்பட்டி சிறைச்சாலை அடைத்துள்ளனர்.
இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக கோவில்பட்டி சிறைச்சாலைக்கு விசாரணைக்குச் சென்ற தூத்துக்குடி மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமாவிடம், ராஜசிங் என்பவர் தன்னை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் கடுமையாகத் தாக்கியதாகப் புகார் அளித்தார்.
விசாரணைக்கு வந்த ராஜசிங். இதைத்தொடர்ந்து நீதிபதி ஹேமா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இவ்வழக்கு சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ராஜா சிங்கை தாக்கியது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது சிபிசிஐடி காவல் துறையினர் எட்டு பிரிவுகளின் கீழ் இன்று (ஆக.20) வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கு குறித்த விசாரணைக்கு ராஜாசிங் இன்று தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பேய்குளம் அருகே ஜெயக்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான் உள்பட 32 பேரை சாத்தான்குளம் காவல் துறையினர் கைது செய்தனர்.
அப்போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர்களான ரகு கணேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் என்னை கடுமையாகத் தாக்கினர். தொடர்ந்து என்னை கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். அப்போது சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக சிறைச்சாலைக்கு வந்த நீதிபதி ஹேமாவிடம், காவலர்கள் என்னை தாக்கியது குறித்து நேரில் புகாரளித்தேன்.
அப்புகாரின் பேரில் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று சிபிசிஐடி விசாரணைக்கு நேரில் ஆஜராக வந்துள்ளேன்'' என்றார். இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் ராஜசிங்கிடம் ஆய்வாளர் சபிதா விசாரணை நடத்தி விவரங்கள் சேகரித்தார்.
இதையும் படிங்க:வெடிகுண்டு வீசி காவலர் உயிரிழப்பு -ரவுடியின் உடல் அரிவாளுடன் அடக்கம்!