தூத்துக்குடி: போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், பணியில் மரணமடைந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமனங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில், தற்போது வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளன.
பேருந்துகள் இயக்கம்:இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் தற்காலிக பணியாளர்கள் மூலமாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பணிமனையில் 65 பேருந்துககள் இயக்கப்படும் நிலையில், 64 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. விளாத்திகுளம் பணிமனையில் வழக்கம் போல 33 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கோவில்பட்டியைப் பொறுத்தவரை, அண்ணா பேருந்து நிலையம் மற்றும் கூடுதல் பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து கிராமப்புற பகுதிகள் மற்றும் தூத்துக்குடி திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூடுதல் பேருந்து நிலையம் வழியாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் சென்று வருகின்றன.
கோவில்பட்டி நகர் பகுதியில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், மதுரையில் இருந்து வழக்கமாக திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்லக்கூடிய பேருந்துகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. வழக்கமாக மதுரையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து, கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் வழியாகச் செல்லும்.