தூத்துக்குடி:மில்லர்புரம் சின்னமணி நகரில் மாக்கன் மகன் தங்கதுரை (52) என்பவர் வசித்து வருகிறார். இவர், தனது மொபைலில் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்தியபோது, அதில் ‘Part Time Job தேவையா?’ என்ற விளம்பரம் Aashna (@Aashna_2mi) என்ற ஐடியில் இருந்து வந்துள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்த தங்கதுரை, அந்த விளம்பரத்தை அனுப்பிய நபரிடம் பேசி உள்ளார்.
அப்போது அவர்கள் FROSCH Travel Management Company என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், தங்களது நிறுவனம் உலகம் முழுவதும் பல இடங்களில் செயல்பட்டு வருதாகவும், கரோனா காலத்தில் தங்களுடைய கம்பெனி வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே அதனை மேம்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட Star Ratings கொடுப்பதன் மூலம் நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்றும் கூறி உள்ளனர்.
அது மட்டுமல்லாமல், அவ்வாறு ஸ்டார் ரேட்டிங்ஸ் கொடுத்தால் கமிஷன் தருவதாகவும் தங்கதுரையிடம் கூறி உள்ளனர். இதனால் ரேட்டிங் கொடுத்த தங்கதுரைக்கு முதலில் ஆயிரத்து 100 ரூபாய் மற்றும் ஆயிரத்து 500 ரூபாய் லாபமும் கொடுத்துள்ளனர். இந்த நிலையில், அதிக கமிஷன் வேண்டுமென்றால் பணத்தை முதலீடு செய்து, தாங்கள் கூறும் பணிகளை செய்யும்படி தங்கதுரையிடம் கூறி உள்ளனர்.
இதனால், அவர்கள் கூறிய வளைதளங்களில் பணத்தை முதலீடு செய்து, பல்வேறு பணிகளுக்கு பல தவணைகளாக மொத்தம் 45 லட்சத்து 91 ஆயிரத்து 54 ரூபாய் பணத்தை தங்கதுரை அளித்துள்ளார். இவ்வாறு 45 லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத்திய பிறகே, தான் மோசடி செய்யப்பட்டதை தங்கதுரை உணர்ந்துள்ளார்.
எனவே, இது குறித்து தேசிய சைபர் கிரைம் இணைய தளத்தில் (NCRP) தங்கதுரை புகார் பதிவு செய்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன், தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில், சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில், உதவி ஆய்வாளர் சுதாகரன் மற்றும் காவல் துறையினர் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதன் பேரில், தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்ட தனிப்படை காவல் துறையினர், தங்கதுரையிடம் பணம் மோசடி செய்த நபரை கண்டறிந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் மானூர் குப்பனாபுரத்தைச் சேர்ந்த கோவில்பிள்ளை என்பவரது மகன் எலியாஸ் பிரேம் குமார் (31) என்பவர்தான் இந்த பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.