தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆ.சண்முகபுரத்தைச் சேர்ந்த வேல்ராஜ் மகன் வாழ்வாங்கி (27). இவர் கிருஷ்ணராஜபுரம் மெயின் ரோட்டில் பரோட்டா கடை மற்றும் மட்டன் ஸ்டால் நடத்தி வந்தார். நேற்றிரவு (நவ.,2) 11 மணி அளவில் கடையை பூட்டிக்கொண்டிருந்தபோது திடீரென வந்த 3 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் வாழ்வாங்கியை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் கல்லாவில் இருந்த பணத்தைக் கொள்ளை அடித்துவிட்டு அக்கும்பல் தப்பியோடியுள்ளது. படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாழ்வாங்கியை, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், துணைக் கண்காணிப்பாளர் கணேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் குறித்து பரோட்டா கடைக்கு எதிர்புறம் உள்ள பிரபல மசாலா கம்பெனியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.