தூத்துக்குடி: ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் தூத்துக்குடி 3ஆவது மைல் அரசு மருத்துவக் கல்லூரி அருகே காமராஜ் நகரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலுக்கு நேற்றிரவு 10 மணியளவில் மதுபோதையில் வந்த 3 பேர் ஓசியில் பார்சல் கேட்டு தகராறு செய்துள்ளனர். அதோடு கடை உரிமையாளரை தாக்கியுள்ளனர்.
இதனால் கடையின் பரோட்டா மாஸ்டராக வேலைபார்த்து வந்த முடிவைத்தானேந்தல் ஓதுவார் தெருவைச் சேர்ந்த பொன்செந்தில் முருகன் (31) உள்பட ஹோட்டல் ஊழியர்கள் அவர்களை தட்டிக் கேட்டுள்ளனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.
இதையடுத்து கடையில் வியாபாரம் முடிந்துவிட்டு பொன்செந்தில் முருகன், திரவிய ரத்தினம் நகரைச் சேர்ந்த தேவராஜ் (39), சாயர்புரம் ரைஸ்மில் தெரு சாமுவேல் (37), பிரையன்ட் நகர் 13ஆவது தெருவைச் சேர்ந்த பழனிமுருகன் (55) ஆகியோருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இவர்கள் ஆசிரியர் காலனி அருகே சென்றபோது 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் சராமாரியாகத் தாக்கியது. இதில் பொன் செந்தில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேவராஜ், பழனிமுருகன், சாமுவேல் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொன்செந்தில் முருகன் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனை்ககு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த மூவருக்கும் அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவருகிறது.
இந்த வழக்கில் 3ஆவது மைல் புதுக்குடியைச் சேர்ந்த கற்குவேல் (22) என்பவரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. மேலும் 4 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். முதல்கட்ட தகவலில் இந்த கொலையில் ஈடுபட்டவர்களுக்கும், பார்சல் கேட்டு தகராறு செய்தவர்களுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:மூதாட்டியை கொலை செய்து கொள்ளையடித்த கும்பல் - போலீஸ் விசாரணை