தூத்துக்குடி:ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி, தருவைக்குளம் ரோடு, கோமஸ்புரத்தில் ராஜிவ் காந்தி நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இக்குடியிருப்பு சுவற்றில் நெய்தல் கலை விழாவை பறைசாற்றும் வகையில் அழகிய ஓவியங்கள் வரைய தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஏற்பாடு செய்திருந்தார்.
இதைத்தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள திருநங்கைகள் ஒன்றாக இணைந்து நடத்தி வரும் அரவாணி ஆர்ட் புராஜெக்ட் அமைப்பினரிடம் ஓவியம் வரைய கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த அமைப்பில் உள்ள ஸ்மிதா அவிமுக்தா, காஞ்சனா, வர்ஷா பிரதீப், நந்தினி, பூஜா, புதேஷ், ஆகிய 7 பேர் கொண்ட குழுவினர் ஓவியம் வரையும் பணிகளைக் கடந்த மாதம் 30ஆம் தேதியன்று தொடங்கினர்.
இப்பணிகளை நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடந்த 7அன்று தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து கடந்த 13 நாட்களாக நடைபெற்ற இப்பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது.
இக்குடியிருப்பில் உள்ள ஐந்து கட்டடம் கொண்ட 32 அடி உயர சுவர்களில் அழகிய ஓவியங்களை திருநங்கைகள் மக்களைக் கவரும் வண்ணத்தில் தீட்டி வியப்படைய வைத்துள்ளனர். இச்சுவற்றில் நெய்தல் நிலம் குறித்தான மீனவர்கள் கடலில் மீன் பிடிப்பது, உப்பளத்தொழிலாளர்கள் வாழ்வியல் குறித்த ஓவியங்கள், நடனக்கலைகளை ஊக்குவிக்கும் விதமாக, முத்து போல் சிரிக்கும் குழந்தைகளின் ஓவியங்கள் என அழகிய ஓவியங்களைத் தீட்டி கவர வைத்துள்ளனர்.