தூத்துக்குடி மாவட்டத்தில் 48 இடங்களில் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று (ஆகஸ்ட் 5) தூத்துக்குடி வந்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக ஏறுமுகமாக இருந்த கரோனா தொற்று, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதன் மூலமாக படிப்படியாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றால் 1.62 விழுக்காடு பேர் இறந்தனர். தூத்துக்குடியை பொறுத்தமட்டில் 0.7 விழுக்காடு பேர் மட்டுமே தொற்றினால் இறந்தனர்.
இதில், கடலோரப் பகுதிகளில் குடியிருப்புகள் மிக நெருக்கமாக அமைந்திருப்பதனால் கரோனா தொற்று தீவிரமடைய வாய்ப்புள்ளது. ஆகவே, ஒவ்வொரு இடங்களிலும் காய்ச்சல் பரிசோதனை மையங்கள், கரோனா பரிசோதனை மையங்கள், கரோனா கண்காணிப்பு மையம், நோய் கட்டுப்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கிராமப் பகுதிகளில் இருப்பவர்கள் முகக் கவசங்கள் அணிவதில் தயக்கம் காட்டுகின்றனர். அனைவரும் 100 விழுக்காடு முகக் கவசங்களை முறையாக அணிவதில் அக்கறை செலுத்தவேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் தினம்தோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மருத்துவமனைகளில் 75 ஆயிரமாக இருந்த படுக்கை வசதி, போர்க்கால அடிப்படையில் எடுத்த நடவடிக்கை மூலம் ஒரு லட்சத்து 18 ஆயிரம் படுக்கைகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இதுதவிர தமிழ்நாடு முழுவதும் 150 கோடி ரூபாய் செலவில் ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் வசதியுடன் கூடுதல் படுக்கைகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க:சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களை வாழ்த்திய தமிழ்நாடு முதலமைச்சர்!