கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனை நீக்குவதற்காக தூத்துக்குடி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு மட்டும் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும், ஆக்சிஜன் உற்பத்தி பணியை கண்காணிப்பதற்கு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், சார் ஆட்சியர் அடங்கிய கண்காணிப்பு குழுவினையும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. இந்த கண்காணிப்பு குழுவின் கீழ் 6 பேர் அடங்கிய மேற்பார்வை குழுவை நியமித்து கொள்ள உச்ச நீதிமன்றம் அதிகாரம் வழங்கியுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் அலகினை சுத்தப்படுத்தும் பணிகள் கடந்த வாரத்தில் நடைபெற்றன. தமிழ்நாடு அரசின் உத்தரவை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது. பின்னர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டன.
தற்போது, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி சோதனை ஓட்டம் இன்று (மே.11) தொடங்கியது.