தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குப்பட்டது ஆலந்தா ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள சவலப்பேரி கிராமத்தினைச் சேர்ந்த முருகேசன், சுப்பையா, செந்தூர்பாண்டியன், சின்னதுரை, கணபதி, ஆறுமுகத்தாய், முருகேசன் என, ஏழு பேரும் கடந்த மாதம் (ஏப்.) 17, 20 ஆகிய தேதிகளில், சிறு, குறு விவசாயிகளிடம் சான்று கேட்டு இ-சேவை மூலமாக விண்ணப்பம் செய்துள்ளனர்.
அதில், கிராம நிர்வாக அலுவலர் சான்றொப்பம் இட்டதாகக் கூறி, தங்கள் நிலங்களின் அடங்கல் நகலை இணைத்து விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், விவசாயிகளுக்குச் சிறு, குறு விவசாயிகள் சான்று கொடுப்பதற்காக ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்திலிருந்து, ஆலந்தா கிராம நிர்வாக அலுவலர் மாரிசங்கருக்கு விபரம் கேட்டுள்ளனர். அப்போது, தான் ஏழு விவசாயிகளுக்கும் சான்று அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால், விண்ணப்பத்தில் கிராம நிர்வாக அலுவலர் சான்று என்று கையெழுத்து இட்டு சீல் இருந்ததால் குழப்பமடைந்த அலுவலர்கள், ஏழு விவசாயிகளையும் அழைத்து விசாரணை நடத்திய போது, அலுவலர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. தாங்கள் எதுவும் விண்ணப்பம் செய்யவில்லை என்றும், ஆலந்தா ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்னதுரை என்பவர் தான் மானியத்துடன் கூடிய திட்டங்கள் இருக்கிறது என்றுக் கூறி, தங்களிடம் நிலத்தினுடைய ஆவணங்களைப் பெற்றுச் சென்றதாகவும், தங்களுக்கு வேறு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளனர்.