தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், ராஜேந்திர பாலாஜி, மணிகண்டன், சேவூர் ராமசந்திரன், ராஜலட்சுமி, கடம்பூர் ராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தை முடித்துக் கொண்டு அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் காமராஜ் கூறியதாவது,
ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக கோட்டை- அமைச்சர் காமராஜ்
தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அதிமுக கோட்டை என்றும், நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த நான்கு தொகுதிகளிலும் அதிமுக கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். அதேபோல் ஓட்டபிடாரம் தொகுதி அதிமுக கோட்டை. இதுவரை நடந்த தேர்தல்களில் அதிமுகதான் இங்கு அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.
குறிப்பாக ஓட்டபிடாரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மோகன் சுமார் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். மேலும் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டு கொடுக்காமல் மத்திய அரசோடு நாங்கள் இணைந்து ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.