தமிழ்நாட்டில் காலியாக உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, மக்களவைத் தேர்தலின் 13 வாக்குச்சாவடிகளின் மறுவாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆட்சியர் சந்தீப் நந்தூரி மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிங்கம் பட பாணியில் ஆய்வு செய்த ஆட்சியர்...! - 257 வாக்குச்சாவடி
தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்குட்பட்ட 257 வாக்குச்சாவடி மையங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 'ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை இடைத் தேர்தலின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. தேர்தல் பாதுகாப்புப் பணியில் 3,000 காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர மத்திய ஆயுதப்படை காவல் துறையினர் தொழில் பாதுகாப்புப்படை காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 257 வாக்குச்சாவடி மையங்களில் 71 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனத் தெரியவந்துள்ளது.
இவற்றில் 50 வாக்குச்சாவடி மையங்களில் மத்திய ஆயுதப்படை காவல் துறையினரும், மீதமுள்ள 21 வாக்குச்சாவடி மையங்களில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல்துறையினர், மத்திய ஆயுதப்படை காவல் துறையினர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இது தவிர தேர்தல் பார்வையாளர்கள், நுண் பார்வையாளர்கள், மண்டல அலுவலர்கள் என அனைவருமே 100 விழுக்காடு அளவுக்கு தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்' என்று அவர் தெரிவித்தார்.